Friday, 7 February 2020

உலகம் வியக்கும் தமிழறிஞர் பாவாணர்

உலகம் வியக்கும் தமிழறிஞர் பாவாணர் | பேராசிரியர் இரா.மதிவாணன், இயக்குனர், சிந்துவெளி எழுத்தாய்வு நடுவம், சென்னை. இன்று (பிப்ரவரி 7-ந்தேதி) தமிழறிஞர் தேவநேய பாவாணர் பிறந்தநாள். தொல்காப்பியர் காலம் முதல் அண்மைக்காலம் வரை எவரும் துணிந்து செய்யாத சொற்பிறப்பு என்னும் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் உலக அரங்கில் தன்னிகரற்று விளங்கியவர் மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர். இவர் 7.2.1902 அன்று சங்கரன் கோவில் அடுத்த கோமதிமுத்துபுரத்தில் பிறந்தார்.

தமிழரின் நாகரிகத் தொட்டில் குமரிகண்டம், தமிழே உலகத் தாய்மொழி, தமிழ் என்பது தனித் தமிழ்தான், உலக மொழிகளில் தமிழ் ஒன்றில் தான் தெளிவான வேர் மூலங்களை காணமுடியும் என்பன அவர் கண்டறிந்த உண்மைகள். ஒரு சொல்லின் வேர்மூலம் காண்பதற்கு வெளிநாட்டவர் கையாண்ட அணுகுமுறைகள் தவறானவை என்று நிறுவிக்காட்டினார். அமெரிக்க மொழியியல் பேராசிரியர் இல்லியேர் லெவிட், பாவாணரின் வேர்ச்சொல் ஆராய்ச்சியை முழுமையாக ஏற்றுக் கொண்டார்.

மேல்நாட்டார் அணுகுமுறை தவறு என்பதற்கு காரணமும் காட்டினார். தமிழ் வேர்ச்சொற்கள் உலக மொழிகள் அனைத்திலும் கலந்திருப்பதை பாவாணர் சான்றுகளுடன் எடுத்து கூறினார்.

‘கொல்’ என்னும் சொல்லே ஆங்கிலத்தில் ‘கில்’ ஆகியுள்ளது. மேல்நாட்டு சொற்பிறப்பு ஆராய்ச்சியாளர்கள் ‘கில்’, ‘பில்’ என்னும் சொற்களில் முதலில் உள்ள ‘கே’ மற்றும் ‘பி’ என்னும் தனி எழுத்துகளே பொருள் வேறுபாட்டுக்கு காரணம் என்றனர். பாவாணர் அதை மறுத்தார். ‘கே’ என்னும் எழுத்துக்கு கொல்லுதல் என்னும் பொருள் உள்ளதா என்று கேட்டார். தமிழில் உள்ள ‘குல்’ என்னும் வேர்ச்சொல் குத்துதல் என்ற பொருளுடையது. அதுவே ஆங்கிலத்தில் கில் என்று மாறியது என்றார் பாவாணர். இந்த வேர்ச்சொல் விளக்கமே சரியானது என்று அமெரிக்க பேராசிரியர் ஏற்றுக் கொண்டார். பாவாணரின் ஆராய்ச்சி உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

தமிழில் சொற்பிறப்பு அகரமுதலி உருவாக்குவதற்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாவாணர் நியமிக்கப்பட்டார். இவர் பணியை மேற்பார்வையிட வங்காளத்தைச்சேர்ந்த தேசிய பேராசிரியர் சுனித்குமார் சாட்டர்சி அமர்த்தப்பட்டார். திரு என்னும் சொல்லே வடமொழியில் ஸ்ரீ ஆனது என்று பாவாணர் கூறினார். சாட்டர்சி அதை மறுத்து ஸ்ரீ என்பதிலிருந்தே தமிழில் திரு வந்தது என்றார். இந்த மோதல் முற்றியதால் பாவாணர் அப்பணியிலிருந்து விலகிக்கொண்டார். அதன்பிறகு பாவாணரின் நூல்களைப் படித்தறிந்த பேராசிரியர் சாட்டர்சிக்கு தெளிவு பிறந்தது. பாவாணர் மறைவிற்குப் பின் இந்திய அரசு இந்திய பண்பாட்டு மரபு வரலாறு என்னும் தலைப்பில் ஐந்து தொகுதிகளை ஆங்கிலத்தில் வெளியிட்டது. அதற்கு சாட்டர்சி தலைவராக இருந்தார். ஐந்தாம் தொகுதியில் தமிழறிஞர்கள் என்ற தலைப்பில் பாவாணரைப் பற்றி சாட்டர்சி பின்வருமாறு பெருமையாக குறிப்பிட்டிருக்கிறார். “பாவாணரின் தனித்த உழைப்பு இல்லாது இருந்தால் தமிழின் தூய்மையும், தொன்மையும் வெளியுலகிற்கு தெரியாமல் போய்விட்டிருக்கும்” என்பதே அந்த புகழுரை.

அறிஞர்குழு அப்போதைய முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியை அணுகி பாவாணரின் ஆராய்ச்சி அறிவைப் பயன்கொள்ளும் வகையில் அவருக்கு என ஒரு தனித்த சொற்பிறப்பு ஆராய்ச்சித் துறை அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது. அதனைக் கனிவோடு ஏற்றுக்கொண்டு பாவாணர் தலைமையில் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டம் என்னும் தனித்த இயக்ககத்தை 1974-ல் முதல்-அமைச்சர் கருணாநிதி அமைத்துக் கொடுத்தார். முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்க நேரில் சென்ற பாவாணரைத் தழுவி வரவேற்றபின் மேலும் தங்களுக்கு என்ன வேண்டும் எனக் கேட்டார். எனக்கு ஒரு மலையேறி வேண்டும் என்றார் பாவாணர். முதல்-அமைச்சருக்கு அது புரியவில்லை. அருகில் இருந்த தமிழ் வளர்ச்சி இயக்குனர் சிலம்பொலி செல்லப்பனார், ஐயா பாவாணர் ஒரு ஜீப் கேட்கிறார், எப்பொழுதும் பாவாணர் ஒரு பிறமொழிச் சொல் கூட கலந்து பேசமாட்டார் என விளக்கம் தந்தார்.

திராவிட மொழிகள், வடஇந்திய மொழிகள் ஆகியவற்றின் சொல் தொகுக்க தமிழறிஞர் வேண்டும் என்றார். பெருஞ்சித்திரனார் என் பெயரைப் பரிந்துரைத்தார். சேலம் அரசினர் கல்லூரியில் தமிழ்த்துணை பேராசிரியராக இருந்த எனக்கு பாவாணர் ஒரு அஞ்சல் அட்டை அனுப்பினார். இந்தக் காரிக்கிழமை (சனிக்கிழமை) அன்று சென்னைக்கு வந்து என்னைக் காண்க, உங்களை நான் பணியமர்த்திக் கொள்வேன் என்று எழுதியிருந்தார். அவ்வாறே நான் வந்தபின் என்னைப் பணியமர்த்திக்கொண்டார். அலுவலகத்திற்குக் குறித்த நேரத்தில் வராவிட்டாலும், இலக்கண இலக்கியங்களில் போதிய புலமை இல்லை என்று தெரிந்தாலும் என்னிடம் பணியாற்றத் தகுதியில்லை நீர்போரும் என்று அனுப்பிவிடுவார். அப்படி பலர் போய்விட்டனர். நான் ஒருவனே இறுதிவரை நிலைத்து நின்றேன்.

1981-ல் மதுரையில் நடந்த ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் தொடர்ந்து இரண்டு மணி நேரம் உரையாற்றினார். அவரது பேச்சை எம்.ஜி.ஆர். விரும்பிக்கேட்டார். அப்போது பாவாணருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பாவாணர் 16.1.1981 அன்று காலமானார். ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டிற்கு முன் பாவாணரைப் பெருமைப்படுத்துவதற்காக செந்தமிழ்ச் செல்வர் விருது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. விழா நாளில் அன்றைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். விழா தொடங்குவதற்கு முன் மேடையின் கீழ் முதல் வரிசையில் வந்து அமர்ந்தார். பின்வரிசையில் நானும், பாவாணரும் அமர்ந்திருந்தோம். நான் பாவாணரை அணுகி ஐயா, முதல்-அமைச்சர் வந்திருக்கிறார் அவருக்கு வணக்கம் செலுத்துவது நல்லது என்றேன். நீர் பேசாமல் இரும். மன்னனைவிட மாசறக் கற்றோன் சிறந்தவன் ஆதலால் முதல்-அமைச்சர் எனக்கு வணக்கம் சொன்ன பிறகு தான் நான் அவருக்கு வணக்கம் சொல்ல வேண்டும் என்று விடையளித்த போது, பாவாணரிடம் பழந்தமிழ்ப் புலவர்களின் வீறார்ந்த தன்மதிப்பு மிகுந்திருந்ததை காணமுடிந்தது. என் மனக்கண்ணில் பாவாணர் இமயமலை போல் உயர்ந்து நின்றார்.

பாவாணரின் அகரமுதலி திட்டம் 31 தொகுதிகளை வெளியிடத் திட்டமிட்டது. அகரத்தில் தொடங்கும் ஒரு தொகுதியை மட்டும் எழுதி முடித்து பாவாணர் மறைந்து விட்டார். அடுத்த 30 தொகுதிகளுக்கும் சொல் தொகுக்கும் பணி எனக்குரியதாயிற்று. பாவாணர் தமிழின் காவலராகவும் விளங்கினார். இந்தி எதிர்ப்பாளராகவும் இருந்தார். அவர் உயர்நிலை பள்ளிகளில் பணியாற்றிய பொழுது வகுப்பு மாணவர்களை வெளியில் அழைத்துச் சென்று இந்தி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினார். எனவே தான் பணியாற்றிய பள்ளிகளில் இருந்து அவர் வெளியேற நேர்ந்தது. தனக்கு வறுமை வந்தாலும் தமிழுக்கு பெருமை சேர்ப்பதாகவே தன் வாழ்வு அமைய வேண்டும் என்று நினைத்தார். பாவாணர் தமிழினக் காவலராகவும் இருந்தார். பெருஞ்சித்திரனாரோடு சேர்ந்து உலகத் தமிழ் கழகம் உருவாக்கினார். அதில் ஒரு பகுதியாக பாவாணர் தமிழ் குடும்பங்களை உருவாக்கினார்.

பாவாணர் தமிழ் குடும்பம் என்பது சாதி வேறுபாடுகளைக் கடந்த தமிழின ஒற்றுமை வளர்ப்பதை நோக்கமாக கொண்டது. இதன் குறிக்கோள் சாதி உணர்வை வேரறுக்க உதவியது.

No comments:

Popular Posts