Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

இன்றைய தேவை பொது ஒழுங்குமுறை

இன்றைய தேவை பொது ஒழுங்குமுறை வழக்கறிஞர் கோ. மன்றவாணன் அடுத்தவருக்குத் தொல்லை அளிக்காத வகையில் நம் நடவடிக்கைகள் அமைவதே பொது ஒழுங்கு. தனிஒழுங்கும் இல்லாமல் பொதுஒழுங்கும் இல்லாமல் நம் சமூகம் தன்னல வெறியோடு அலைகிறது. ஒரு திருமண விழாவுக்குச் சென்றிருந்தேன். மற்ற வாகனத்தை எடுப்பதற்குத் தொந்தரவு தராத வகையில் இடம் விட்டு என் வாகனத்தை வரிசை முறையில் நிறுத்தினேன். திரும்ப வந்து பார்த்த போது என் வாகனத்தை எடுக்க முடியாத வகையில் பல வாகனங்களைக் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தி இருந்தார்கள். நான் அவசரமாகச் செல்ல வேண்டி இருந்தது. வாகனத்தை எடுக்க முடியாததால் ரத்த அழுத்தமும் எகிறியது. கடைசியில் என் வாகனத்தை எடுக்க முக்கால் மணிநேரத்துக்கு மேலானது. இதுபோன்ற அனுபவம் நம்மில் பலருக்கு ஏற்பட்டிருக்கும்.ஒரு வரிசையில் வாகனங்களை நிறுத்திய பிறகு, அவ்வண்டிகளை எடுக்கும் வகையில் போதுமான பாதைவிட்டு, அடுத்த வரிசையில் வாகனங்களை நிறுத்த வேண்டும். இவ்வாறே அடுத்தடுத்த வரிசைகளில் வாகனங்களை ஒழுங்கு முறையில் நிறுத்த வேண்டும். ஆனால் இந்த ஒழுங்கைப் பலரும் பின்பற்றுவதில்லை. முதலில் யாரோ ஒருவர் முறைதவறி நிறுத்தும் போது, மொத்த வரிசையும் சிதறிவிடுகிறது. ஒருவர் செய்யும் தவறு, முழு சமூகத்தையும் பாதிக்கிறது.கடைவீதிகளில் வாகனங்களை நிறுத்திவிட்டுத் திரும்ப வந்தால், அவ்வளவு சீக்கிரத்தில் வாகனங்களை எடுத்து வெளிவர முடிவதில்லை. மற்றவர்களுக்குப் பாதகம் ஏற்படுவதைப் பொருட்படுத்தாமல், தமக்குச் சாதகமாக வாகனத்தை நிறுத்திவிட்டு வந்துவிடுவோருக்குக்கூட அதே முறையில் பதிலடி கிடைக்கிறது. ஆம். அதன்பின் வருவோர் தாறுமாறாக வாகனங்களை நிறுத்தும்போது, முன்னர் ஒழுங்கின்றி நிறுத்தியவர்களின் வண்டிகளையும் எடுக்க முடிவதில்லை. எங்கோ ஓரிடத்தில் தீவைத்தால் அது நாலா புறங்களிலும் பரவி பெரும் தீவிபத்து நடக்கும். அதற்கு ஒப்பானது, வரிசை தவறி வாகனங்களை நிறுத்துவது ஆகும். ஆக ஒருவர் செய்யும் இந்தத் தவறு,மற்றவர்களையும் தொற்றிக் கொள்கிறது. உரிய நேரத்தில் வாகனத்தை எடுத்துக்கொண்டு செல்ல முடிவதில்லை. இதனால் பல மணி நேர உழைப்பும் வீண்போகிறது. பல முக்கிய பணிகளைச் செய்ய முடியாமல் இழப்புகளும் நேரிடுகின்றன. பஸ்சில் பயணிக்கும் போது முன்பக்க ஜன்னல் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களில் சிலர், எச்சில் துப்புவதை வழக்கமாகக் கொண்டிருப்பர். அந்த எச்சில் காற்றின் வேகத்தில் பின் இருக்கையில் உள்ளவர்கள் மீது தெறிக்கும். பஸ் நிற்கும்போது எட்டத் தள்ளி எச்சில் துப்புங்கள் என்றால், அவர் சற்று நேரம் துப்பாமல் இருந்துவிட்டு மறுபடியும் துப்புவார். இந்த அனுபவம் பயணம் செய்யும் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம். பஸ் நிலையங்களில் நாள்தோறும் நடக்கிற நிகழ்வுதான் இது. ஒரு பஸ் நிலையத்துக்குள் நுழைகிறபோதே அந்தப் பஸ்சுக்காக காத்திருந்த பலர் ஓடி அந்த பஸ்சில் ஏறுவார்கள். இறங்க வேண்டியவர்கள் இறங்க முடியாத நிலை. உள்ளிருப்பவர்கள் இறங்கினால்தானே வெளியில் நிற்பவர்களுக்கு இடம் கிடைக்கும். அதுபற்றி எல்லாம் கவலைப்படாமல் முட்டி மோதி உள்ளே வலுக்கட்டாயமாக ஏறுவார்கள். பலரின் சிரமங்களைப் பொருட்படுத்துவதில்லை. இடத்தைத் தமக்கு ஒதுக்கீடு செய்வதாகக் கருதிக்கொண்டு கைக்குட்டைகள், துண்டுகள் பைகள் போன்றவற்றை வெளியில் நின்றபடியே பஸ் இருக்கையில் எறிவார்கள். சிலர் அதை எடுத்து வேறு இடங்களில் போடுவார்கள். இதனால் வாய்த்தகராறுகள், அடிதடிகள், மோதல்கள் ஏற்பட்டு மனத்துயர்கள்தாம் மிஞ்சும். மேலும் முன்னரே வந்து நீண்ட நேரம் காத்திருந்தவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை. அப்போதுதான் வந்தவர்களுக்கு இடம் கிடைத்துவிடுகின்றன. வலுத்தவனுக்கே இங்கே வாழ்க்கை என்பது சமூக நேர்மைக்கு விடப்பட்ட சவால் அல்லவா? இதற்கு மாறான நிகழ்வைப் பல ஆண்டுகளுக்கு முன் நான் பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் பார்த்து வியந்திருக்கிறேன். பஸ் வருவதற்கு முன் தாமாகவே வரிசையில் ஆண்கள் பெண்கள் நிற்பார்கள். பஸ் வந்ததும் அதிலிருப்போர் இறங்கிய பிறகு, வரிசையில் நிற்போர் முறைப்படி ஏறுவார்கள். பஸ் நிரம்பியதும் அடுத்த பஸ் வரும்வரை காத்திருப்பார்கள். யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. நகரப் பஸ்களில், மாநகரபஸ்களில் கூட்ட நெரிசல்கள் அதிகம். அத்தகைய பஸ்களில் சில இளைஞர்கள் முதுகில் மூட்டை சுமப்பது போல் ஒரு பெரிய பையைச் சுமந்து, அடுத்தவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் முன்னும் பின்னும் தம் போக்கில் மற்றவர்களை இடித்துவிட்டு அவசர அவசரமாக நடப்பார்கள். அவர்கள் முதுகில் இருக்கும் பெரிய பைகள் மற்றவர்களை இடிக்கும். சிலர் அணிந்திருக்கும் கண்ணாடிகளை இழுத்துக் கீழே விழச் செய்யும். அந்தப் பையில் துருத்தி இருக்கும் சில பொருட்கள் மற்றவர்களின் ஆடைகளைக் கிழிக்கும். ஏன் சதைகளையும் கிழிக்கும். அத்தோடு மட்டுமில்லாமல் அந்த இளைஞர்கள் அணிந்திருக்கும் கடினமான மூடு காலணிகள் பிறரின் கால்களை நசுக்கும். கால் மிதிபடும்போது வயதானவர்கள் அலறுவது அந்த இளைஞர்களின் காதுகளுக்குக் கேட்காது. அந்தக் காதுகளில்தான் கர்ணனின் கவச குண்டலம்போல் ஏற்கனவே ஹெட்செட் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றனவே.சென்னை நகரில் மின்சார ரெயிலில் இந்த காட்சி நாள் தோறும் அரங்கேறுவதைக்காணலாம். பிறருக்குப் பாதிப்பு இல்லாமல் சற்றுக் கவனமாக அந்த இளைஞர்கள் நடந்துகொண்டால், குறிப்பாக முதியோர்கள் மிகவும் வாழ்த்துவார்கள். பஸ்களில் பயணிகளின் கூட்டநெரிசலைப் பயன்படுத்தி சில இளைஞர்கள், பெண்கள் பகுதியில் முன்னேறிப் பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறார்கள். இளைஞர்களின் வன்முறைக்கு அஞ்சியும் வெளியில் சொல்ல முடியாமலும் அந்தப் பெண்களின் மனம்படும் பாடுகள் யாருக்குத் தெரியப் போகிறது? வெற்றிலை பாக்கு புகையிலையை மென்றும். பான்பராக் போன்ற போதை பொருட்களை மென்றும் பொது இடங்களில் எச்சில் துப்புவர். பல அலுவலக சுவர்களிலும் தரையிலும் பான்பராக் கரைகளை பார்க்கலாம்.சுவர்களில் சளியைத் துடைப்பதும், சாப்பாட்டு மிச்சங்களைப் பலர் நடந்து போகும் பாதைகளில் வீசுவதும், அருகில் பெண்கள் இருக்கிறார்கள் என்ற கூச்சமோ வெட்கமோ இல்லாமல் இயற்கைக் கடன்களைத் தீர்ப்பதும், நெடுஞ்சாலைகளில் உள்ள ஊர்காட்டிப் பலகைகளில் சுவரொட்டி ஒட்டி மறைப்பதும் பொது ஒழுங்கைக் கெடுக்கும் செயல்கள்தாம். சுற்றுப் புறத்தைச் சுத்தமாக வைத்திருப்பது ஆலயப்பணி போன்ற அறப்பணியே என்பதை எப்போது உணரப் போகிறோம்? பொது இடங்களில் புகை பிடிக்கக்கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டாலும் தெருக்களிலும் பஸ்களிலும் புகைப்பிடிப்பவர்கள் இருக்கிறார்கள். இது புகைப்பிடிப்பவர்களை விட புகையை சுவாசிக்கும் அருகில் இருப்பவர்களுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. இவைபோல் இன்னும் பற்பல அன்றாட நிகழ்வுகள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. பொது ஒழுங்கு இல்லாமல் போவதற்கு மக்களிடத்தில் உள்ள சுயநலம், சமூகப் பொறுப்பின்மை போன்றவைதாம் காரணங்கள். நாகரிக சமுதாயம் என்பது, பொதுஒழுங்கு மேம்படுவதில்தான் உள்ளது. நாம் நாகரிக சமூகத்தில்தான் வாழ்கிறோமா?

கல்விச்சோலை - kalvisolai Articles

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement