ஆசிரியர் பணியின் தொன்மை
உலகம் நாகரிகம் அடைந்த காலம் முதலே, கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மதிப்போடு போற்றப்பட்டனர். ஆசிரியர் பணி ஓர் அறப்பணியாகவே கருதப்பட்டது. புராணக் காலங்களிலும் சரி, அறிவியல் வளர்ச்சிக் காலங்களிலும் சரி, குருமார்கள் என அழைக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவராலும் மரியாதைக்குரியவர்களாகவே இருந்தனர். பாண்டவர்களும் கௌரவர்களும் ஒரே குருவிடம் கல்வி கற்ற பெருமைக்குரியவர்கள்.
புறநானூறு (183) ஆசிரியர்-மாணவர் உறவைப் பின்வருமாறு விளக்குகிறது: "கற்பிக்கும் ஆசிரியருக்குத் தேவைப்படும்போது உதவி செய்தும், அவருக்குத் தேவையான பொருளைக் கொடுத்தும், சோர்வின்றிப் பணிவுடன் மாணவர் கற்க வேண்டும்."
பிரிட்டிஷ் ஆட்சியும் கல்வித்துறையும்
பிரிட்டிஷாரின் வருகைக்குப் பின்னரே, கல்வி மற்றும் ஆசிரியர் பணிக்கு முறையான நடைமுறைகள் உருவாகின. கல்வித் துறை தொடங்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு, அவர்கள் அரசு ஊழியர்களாக ஆக்கப்பட்டனர். ஆசிரியர் பணிக்கு வர விரும்புவோர் பயிற்சி பெற வேண்டும் என்ற விதிகளும் அரசு வகுத்தது.
டெட் (TET) தேர்வு கட்டாயம்
தற்போது, மத்திய அரசின் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், 'டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழகத்தில் இத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தி வருகிறது.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) விதிமுறைகளின்படி, டெட் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட வேண்டும். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் அந்த விதிமுறையைப் பின்பற்றுவது கிடையாது. உதாரணமாக, 2022-ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய தேர்வு 2025-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்டது.
சமீபத்திய டெட் தேர்வு முடிவுகள்
கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் 15, 16 தேதிகளில் டெட் தேர்வு நடைபெற்றது. 4.24 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். இப்போது இதன் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு, 1.50 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்களைப் பிப்ரவரி 2 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவித்துள்ளது.
தேர்வு விவரங்கள்
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைத்து வகையான பள்ளிகளிலும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வு மொத்தம் இரண்டு தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், இரண்டாம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.
மொத்தம் 150 மதிப்பெண்களைக் கொண்ட இத்தேர்வில், பொதுப் பிரிவினர் 60% (90 மதிப்பெண்கள்) எடுக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஆந்திரம், தெலங்கானா, ஒடிசா மாநிலங்களைப் பின்பற்றித் தமிழ்நாட்டிலும் சமீபத்தில் தேர்ச்சி மதிப்பெண் 55% (82 மதிப்பெண்கள்) ஆகக் குறைக்கப்பட்டது.
தேர்ச்சி விகித உயர்வுக்கான காரணங்கள்
சமீபத்திய டெட் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் ஜனவரி 30 அன்று வெளியிட்டது. இம்முறை தேர்ச்சி பெற்றவர்கள் பற்றிய தரவுகளும் வெளியாகி உள்ளன:
- முதல் தாள்: 92,417 பேர் எழுதினர்; 45,469 பேர் (49.20%) தேர்ச்சி.
- இரண்டாம் தாள்: 3,03,900 பட்டதாரிகள் எழுதினர்; 1,02,004 பேர் தேர்ச்சி.
- மொத்தம் 1.50 லட்சம் பேர் தேர்ச்சி.
சவால்களும் கோரிக்கைகளும்
ஏராளமான ஆசிரியர்கள் ஓரிரு மதிப்பெண்களில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். அதே சமயம், வினாத்தாளில் தவறாக இடம் பெற்ற சில கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
ஆசிரியர் பணி நியமனத்துக்கான கொள்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இடைநிலை ஆசிரியர் பணிக்கு வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்தவர்களுக்குப் பணி முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு உச்சநீதிமன்றத்தின் சிறப்பு விடுப்பு மனு ஆணை மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் எழுத்துத் தேர்வு மூலம் தெரிவு செய்யப்படுகிறார்கள். இவை அனைத்தும் தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனத்தின் வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெறுகின்றன.
ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி, அதன் மூலம் ஆசிரியர் நியமனங்களைச் செய்து வருகிறது. அரசு அறிவிக்காத வரை, நியமனத்துக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் வாழ்நாள் வரை செல்லுபடியாகும் ஒன்றாகவே கருதப்படும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பணிக்காகவே படித்துத் தேர்ச்சி பெற்றவர்களைத் தகுதித் தேர்வு எழுதச் சொல்வது ஒருபுறம் இருக்க, ஆசிரியராக நியமனம் பெற்றுப் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருபவர்களையும் தகுதித் தேர்வு (டெட்) எழுதியே ஆக வேண்டுமென உச்சநீதிமன்றம் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.
பகுதி நேர மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டங்கள்
தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு அறிவித்த ரூ.2,500 ஊதிய உயர்வை நிராகரித்து, நிரந்தரப் பணிகோரி அவர்கள் போராடினர்.
அதேபோல், சம வேலைக்குச் சம ஊதியம் கோரித் தமிழகம் முழுவதும் கடந்த 37 நாட்களாக நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஊதிய முரண்பாட்டைக் களைந்து சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாகப் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், அமைச்சர் ஆகியோருடன் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதே சமயம், போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு ஊதியப் பிடித்தம் செய்யப்படும் என்று தொடக்கக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்தது. எச்சரிக்கையை மதிக்காமல் போராட்டம் தொடர்ந்ததால், ஜனவரி மாத ஊதியத்தை அரசு நிறுத்தி வைத்தது.
மாணவர் நலன் கருதி, போராட்டங்களில் ஈடுபடாமல் பள்ளிக்குச் சென்று கற்பித்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
முடிவுரை
ஆசிரியர்கள் தங்கள் குறைகளையும் கோரிக்கைகளையும் நியாயமான வழியில் போராடிப் பெற உரிமை படைத்தவர்கள். ஆனால், அவர்களை அடக்க முயல்வது நியாயமில்லை.
கோத்தாரி கல்விக்குழு, "ஒரு தேசத்தின் தலைவிதியானது வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது" என்று கூறியுள்ளது. மாணவர்களை நல்ல குடிமக்களாக உருவாக்கும் ஆசிரியர்களைப் போற்றாத சமுதாயம் எப்படி முன்னேறும்? இதை அரசும், கல்வித் துறையும் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.


0 Comments