ராஜ்நாத் சிங், மத்திய பாதுகாப்பு அமைச்சர்
குடியரசின் தொடர்ச்சியான பயணம்: சேவையே முதன்மை கடமை
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், 1952 மே 16 அன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், அந்தத் தருணத்தின் வரலாற்றுச் சிறப்பை வலியுறுத்தினார். இந்தப் பயணம் முதல் கட்டத்தை நிறைவு செய்திருந்தாலும், இரண்டாவது கட்டத்தில் "எந்தவொரு தேசமோ, மக்களோ முன்னோக்கியப் பயணத்தின்போது ஓய்வெடுக்க இயலாது" என்று உறுப்பினர்களுக்கு நினைவூட்டினார். அரசியல் சுதந்திரமும், அரசமைப்பு இறையாண்மையும் கிடைத்திருந்தாலும், குடியரசின் பணிகள் முழுமையடையவில்லை என்பதை இந்த ஆழமான கருத்து உணர்த்தியது. ராஜேந்திர பிரசாத் கூறியது போல, "நமது மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருவதும், அவர்கள் அனுபவிக்கும் சுமைகளைக் குறைப்பதும்" என்பதே இந்தியாவின் முன் உள்ள உண்மையான பணி.
மக்களே மையப்புள்ளி: ஜனநாயகத்தின் அடிப்படை
இந்த தார்மீகக் கடமையை ஜனநாயக ஆட்சியின் மையமாக நிலைநிறுத்துவதன் மூலம், ராஜேந்திர பிரசாத், அரசுக்கும் அதன் மக்களுக்கும் இடையிலான உறவை மறுவடிவமைத்தார். அரசியல் சாசன ரீதியாக சமத்துவம், அரசியலில் அனைத்து மக்களின் குரலும் ஒலிக்கும் குடியரசு என இந்தியா திகழ இது வழிவகுத்தது. இந்தியக் குடியரசு வெறும் சுதந்திரத்தின் விளைவாக அல்லாமல், ஜனநாயகத்தை நிலைநாட்டிய ஒரு தெளிவான அரசியல் சாசனத்தில் இருந்து உதயமானது.
'மக்களுக்காக, மக்களால், மக்களே நடத்தும் அரசு' என்று பரவலாக அழைக்கப்படும் ஜனநாயகத்தின் இன்றியமையாத தத்துவத்தை இந்த வரையறை பறைசாற்றுகிறது. ஒரு ஜனநாயகக் குடியரசின் வெற்றி, அரசு நிர்வாகம் மக்களுக்கு எந்த அளவிற்கு சேவை செய்கிறது என்பதில்தான் உள்ளது. சட்டத்தின் வழியே, சமூகத் தேவைகளை நிவர்த்தி செய்தல், சமத்துவத்தை நிலைநிறுத்துதல் மற்றும் மனித கண்ணியத்தைக் காத்தல் ஆகியவை இதில் அடங்கும். ஜனநாயகத்தின் நியாயத்தன்மை அதன் செயல்திறனால் நிலைநிறுத்தப்படுகிறது. மேலும், ஒரு குடியரசின் வலிமை, அதன் நலிவடைந்த குடிமக்களை நடத்தும் விதத்தில் அளவிடப்படுகிறது.
உள்ளடக்கிய வளர்ச்சி: கடந்த பத்தாண்டுகளின் செயல்பாடுகள்
"அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்" என்ற தொலைநோக்கு, உள்ளடக்கிய, மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்திற்கான நீடித்த கருத்தியல் உறுதிப்பாட்டை எதிரொலிக்கிறது. பலவீனமான மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், அரசு 'மக்களுக்காக' தீவிரமாகச் செயல்படும் இந்த உறுதிப்பாடு, பிரதமர் மோடியின் தலைமையில் கடந்த பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க முடிவுகளைத் தந்துள்ளது. சமூகத்தில் அனைவரையும் சென்றடையும் உள்ளடக்கிய வளர்ச்சியை வழங்கும் வகையில், கொள்கை சார்ந்த பார்வை உறுதியான செயலாக மாற்றப்பட்டுள்ளது.
சமூக-பொருளாதார நீதிக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு, 'மக்களுக்கான' உள்ளடக்கிய வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் 2025-ஆம் ஆண்டு வறுமை மற்றும் சமத்துவ அறிக்கையின்படி, கடந்த பத்தாண்டுகளில், இந்தியா 171 மில்லியன் மக்களை தீவிர வறுமையிலிருந்து மீட்டெடுத்துள்ளது. பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு செயல்பாட்டு இலக்கை மேலும் மேம்படுத்த, கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016 மற்றும் இஸ்லாமிய பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 போன்ற புரட்சிகரமான சட்டங்கள், வரலாற்று ரீதியாக பின்தங்கிய குழுக்களுக்கு கண்ணியம், சமத்துவம் மற்றும் நீதியை நிலைநாட்ட இயற்றப்பட்டுள்ளன.
மக்கள் இயக்கம்: தூய்மை இந்தியாவும் தற்சார்பு நோக்கமும்
மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்தின் சக்திவாய்ந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்று 'தூய்மை இந்தியா இயக்கம்'. இந்த இயக்கம் 'மக்களுக்காக' என்ற ஜனநாயக லட்சியத்தை சமூகத்தின் அடித்தட்டு அளவில் செயல்படுத்தியது. இது ஒரு சாதாரண சுகாதார முயற்சியை விட, மனித கண்ணியம், பொது சுகாதாரம், பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமூக உள்ளடக்கத்தை மையமாகக் கொண்ட ஒரு நாடு தழுவிய இயக்கமாக உருவெடுத்தது. நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்ட ஒரு பிரச்சினையை நிவர்த்தி செய்ததன் மூலம், தூய்மை இந்தியா இயக்கம் இந்த நூற்றாண்டில் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான மக்கள் தலைமையிலான மற்றும் மக்களால் செயல்படுத்தப்படும் பொது இயக்கமாகத் திகழ்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி விடுத்த தற்சார்பு இந்தியாவுக்கான அறைகூவல், வெறும் பொருளாதார முழக்கமாக மட்டுமின்றி, தனிநபர் மட்டத்தில் தன்னம்பிக்கையின் விரிவாக்கமாகவும் அமைந்தது. முத்ரா திட்டம் மற்றும் திறன் இந்தியா இயக்கம் போன்ற முயற்சிகள் மூலம், குடிமக்கள் தன்னிறைவு பெற்று, தொழில்முனைவு மற்றும் தங்கள் சொந்த திறன்களில் நம்பிக்கையுடன் இருக்க அதிகாரமளிக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
தொடரும் பொறுப்பு
குடியரசின் வலிமை அதன் நிர்வாக அமைப்புகளின் நிலைத்தன்மையில் மட்டுமல்லாமல், அதன் மக்களின் வாழும் யதார்த்தங்களுடன் ஆட்சியை இணைப்பதற்கான தொடர்ச்சியான முயற்சியிலும் உள்ளது. சுதந்திரம் என்பது அனைவருக்கும் கண்ணியம், வாய்ப்பு மற்றும் நீதியாக மாற வேண்டும் என்ற அரசியலமைப்பு வாக்குறுதியை உறுதி செய்ய தலைமுறையும் அழைக்கப்படுகிறார்கள். இந்தியக் குடியரசு ஒரு முற்றுப் பெற்ற திட்டம் அல்ல; இது ஒரு பகிரப்பட்ட பொறுப்பு, ஜனநாயகப் பங்கேற்பால் நிலைநிறுத்தப்படுகிறது. அரசு அதன் குடிமக்களுக்கு எவ்வளவு உண்மையாக சேவை செய்கிறது என்பதன் மூலம் அதன் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.
இன்று குடிமக்கள் நிர்வாகத்தின் மையத்தில் உள்ளனர். இந்தியக் குடியரசு முன்னேறி வருகிறது. சமூக நீதியை வலுப்படுத்துகிறது, பொருளாதார உள்ளடக்கத்தை செயல்படுத்துகிறது, நலன் சார்ந்த ஜனநாயகக் குடியரசின் அரசியலமைப்பு தொலைநோக்கை வலுப்படுத்துகிறது என்று இந்த 77-வது குடியரசு தினத்தன்று நாம் உறுதியாகக் கூறலாம்.


0 Comments