பொங்கல் பரிசும் பொங்கிடும் எதிர்பார்ப்பும்...!

பொங்கல் பரிசும் பொங்கிடும் எதிர்பார்ப்பும்...! பொ ங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி - சேலை வழங்கும் திட்டம் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் ‘பொங்கல் பரிசு பை’ வழங்கும் திட்டம் கூடுதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதில், பச்சரிசி, வெல்லம், முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவை இடம் பெற்றிருந்தன. 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, பச்சரிசி, சர்க்கரையுடன், சர்க்கரை பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வாங்கிக்கொள்வதற்காக ரூ.100 ரொக்கமாக வழங்கப்பட்டது. அதுவும் ஒரு சில ஆண்டுகள் தான் முறையாக வழங்கப்பட்டன. பிறகு அந்த திட்டம் ‘பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு’ என்று பெயர் மாறியது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு துண்டு, தலா 20 கிராம் முந்திரி, உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அந்த பரிசு தொகுப்பில் இடம் பெற்றிருந்தன. ரூ.100 ரொக்கமாக வழங்குவது நிறுத்தப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருகிறதே என்று ஆட்சியாளர்கள் நினைத்தார்களோ என்னவோ, பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்குவாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு கடந்த 2-ந் தேதி சட்டசபையில் கவர்னர் ஆற்றிய உரையில் இடம்பெற்றிருந்தது. சுடச்சுட இந்த திட்டத்தையும் 5-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். 7-ந் தேதி முதல் ரேஷன் கடைகளிலும் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பணி தொடங்கியது. ஆனால், முறையாக இந்தப் பணிகள் நடைபெறுகிறதா? என்று பார்த்தால், ‘இல்லை’ என்று சொல்லும் வேதனையான நிலை தான் உள்ளது. குறிப்பிட்ட தேதிகளில் குறிப்பிட்ட தெருக்களுக்கு வழங்கப்படும் என்று அனைத்து ரேஷன் கடைகளிலும் அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தாலும், அதை செயல்படுத்த கடை ஊழியர்களால் முடியவில்லை. காரணம்.. வங்கிகளில் இருந்து பணம் பெற்று வந்து வினியோகிப்பது அவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கத் தொடங்கிய முதல் நாளிலேயே, வங்கிகளில் இருந்து பணம் தாமதமாக எடுத்துவரப்பட்ட காரணத்தால், அதை சரியான நேரத்தில் வழங்க முடியவில்லை. இதனால், அதிகாலை முதலே நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மணிக் கணக்கில் காத்திருந்தும், பணப் பற்றாக்குறையால் பலருக்கு ரூ.1000 கிடைக்காத நிலை ஏற்பட்டது. “வேலை வெட்டிய விட்டுவிட்டு, காலையிலே இருந்து காத்திருந்தும் எங்களுக்கு பணம் கிடைக்கவில்லையே” என்ற ஆதங்கத்தில் மக்கள் கலைந்து செல்வதை பல இடங்களில் காண முடிகிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில், மக்கள் நெருக்கத்தை கருத்தில் கொண்டு அருகருகே ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன ஆனால், கிராமப் புறங்களில் அப்படி கிடையாது. ஊருக்கு ஒரு ரேஷன் கடை இருப்பதே அரிதான விஷயம். இரண்டு, மூன்று ஊர்களுக்கு சேர்த்துத்தான் ஒரு ரேஷன் கடை என்று வரும்போது, அந்தக் கடையும் ஏதாவது ஒரு ஊரில் தான் இருக்கிறது. ஏனைய 2 ஊரை சேர்ந்தவர்கள், தங்கள் பகுதியில் இருந்து குறிப்பிட்ட ஊரில் உள்ள ரேஷன் கடைகளுக்கு நடந்தோ, வாகனங்களிலோ செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுபோன்ற சூழ்நிலை இருக்கும்போது, ரூ.1000 பணத்துக்காக காத்திருந்து ஏமாந்தால் பொதுமக்கள் மனநிலை எவ்வளவு வேதனைப்படும் என்பதை அரசு எண்ணிப்பார்க்க வேண்டும். தமிழகத்தில் எந்த ரேஷன் கடையை எடுத்துக் கொண்டாலும், பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புக்கான பொருட்கள் ஓரளவு கையிருப்பு உள்ளது. ஆனால், வங்கிகளில் இருந்து எடுத்து வர வேண்டிய ரொக்கப் பணம் தான் போதிய அளவில் வந்து சேர்வதில்லை. இப்போது ரேஷன் கடைகளில் காத்துக்கிடக்கும் கூட்டத்திற்கும் பணம் தான் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. தற்போது, வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 வழங்க சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளதால், மக்கள் மத்தியில் மேலும் குழப்பம் அதிகரித்துள்ளது. நேற்று முதல், ‘நமக்கு ரூ.1000 கிடைக்குமோ?, கிடைக்காதோ?’ என்ற அச்சத்தில், ரேஷன் கடைகள் முன்பு பொதுமக்களின் கூட்டம் மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்றைக்கு ரேஷன் அட்டைகள் எல்லாம் மாற்றப்பட்டு, ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுவிட்டன. ஆதார் எண், செல்போன் எண் எல்லாம் இத்துடன் இணைக்கப்பட்டு விட்டன. வங்கிக் கணக்கு எண்ணையும் இத்துடன் இணைத்தால், அரசு வழங்கும் நிதியையும் நேரடியாக பொதுமக்கள் வங்கிக் கணக்கில் வரவு வைத்துவிடலாமே என்பது இப்போதைய கேள்வியாக எழுகிறது. பயிர் கடன்கள், பயிர் காப்பீட்டு தொகை எல்லாம் இப்போது சம்பந்தப்பட்டவர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கும் முறை அமலில் இருக்கிறது. அது சாத்தியமாகும் போது, இதுவும் சாத்தியமாகுமே என்பதுதான் ரூ.1000 பணத்துக்காக ரேஷன் கடைகள் முன்பு கால்கடுக்க காத்திருக்கும் முதியவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் எல்லாமே இணையவழி சேவையாக மாறிக் கொண்டிருக்கும்போது, அரசு திட்டங்களை முறையாக செயல்படுத்த முடியாமல் பொதுமக்களை அலைக்கழிப்பது எந்த வகையில் நியாயம்?. -ஆர்.கே.

Comments