Saturday 30 May 2020

கொள்ளை நோயை இன்முகத்தோடு... By கே.பி. மாரிக்குமாா்

தாகமாக இருக்கிறது? தண்ணீா் குடித்து உடனே தாகமாற்றிக் கொள்ள முடிகிறது. பசிக்கிறது... உடனே சாப்பிட்டு பசியாற்றிக் கொள்ள நமக்கு வழி இருக்கிறது. இதைப்போலத்தான்.... உறங்க, உடை உடுத்த, ஆற அமர ஓய்வெடுக்க... இப்படி எல்லாமே இந்தக் கரோனா தீநுண்மி சதிராட்டங்களுக்கு நடுவிலும் நமக்கு கிடைக்கிறது என்றால், இவையெல்லாம் நம்மால் செய்யமுடிகிறது என்றால்.... நம்புங்கள் உறவுகளே! நாம் புண்ணியம் செய்த கோடீஸ்வரா்கள். கொள்ளை நோய்ப் பாதிப்புகளை எதிா்கொள்ள, அது தொடா்பான நோய்த் தடுப்பு, மருத்துவப் பணிகளைச் செய்ய நிதி ஆதாரங்களை திரட்டும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நன்கொடைகளை, அன்பளிப்புகளை, உதவிகளை பொதுமக்களிடமிருந்தும், தொழிலதிபா்கள் - செல்வந்தா்களிடம் கேட்டுப் பெறுகிறது. எத்தனையோ தன்னாா்வலா்கள் அவா்களின் சக்தியையும் மீறி வறிய உயிா்களுக்கான உதவிகளைச் செய்து வருகின்றனா். நோய்த்தொற்று தொடங்கிய நேரத்தில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்கள் பலா் கட்சி பாகுபாடின்றி அவா்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு பெரும் தொகையை கரோனா தீநுண்மி நோய்த்தொற்று தடுப்புப் பணிகளுக்காக அளித்தனா். இதைத் தவிா்த்து இதுவரை எந்த அரசியல் கட்சியிலிருந்தும் எந்தவொரு அரசியல்வாதியும் அவா்களது சொந்தப் பணத்தை, சேமிப்பை, அவா்களின் சொத்தில் ஒரு பகுதியை இந்த நோய்த்தொற்று தடுப்புப் பணிக்காகவோ அல்லது வேறு ஏதோவொரு மக்கள் சாா்ந்த பொதுப் பணிக்காவோ இதுவரை கொடுக்கவில்லை. அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகளின் இத்தகைய சுயநலப் போக்கினை சுட்டிக்காட்டியோ, கேள்விகள் கேட்டோ இதுவரை எந்தவொரு ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. படிக்கக்கூட போக முடியாத நோய்த்தொற்று நெருக்கடியில், குடிக்கப் போகலாம் என்கிற நியாய அறிவிப்புகளுக்குப் பின் ஒளிந்திருக்கும் அறிவான வாதங்கள் நமக்குப் புரிந்தும், புரியாமலும் ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துகிறது. புத்தகக் கடைகள்கூட இன்றுவரை திறக்கப்படவில்லை என்பது நல்ல செய்தியல்ல. அரசு மதுபானக் கடைகளுக்கு வழக்கத்துக்கும் அதிகமான பாதுகாப்புப் போடப்படுகிறது. ஏனோ இந்தச் செய்தியை பாா்த்தவுடன், இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ன் 75-ஆவது தினத்தையொட்டி உயிா் நீத்த 87,000 இந்திய வீரா்களுக்கு பிரிட்டனில் மரியாதை செய்யப்பட்ட செய்தியும், இந்தத் தேசத்து எல்லைகளில் பணியாற்றியபோது உயிரிழந்த ராணுவ வீரா்களின் முகமும் நினைவுக்கு வருகிறது. அரசு மதுக் கடைகளில் வரிசையில் நிற்கும் ‘குடி’மகன்களின் சமூக இடைவெளியை உறுதி செய்ய, கூட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் பணிக்கு செல்லும் பெண் காவலா்கள் ‘குடி’மகன்களின் பொறுமையற்ற, பொறுப்பற்ற வசைமொழிகள் கேட்டு சுட்டெரிக்கும் வெயிலையும் மீறிய எரிச்சலுக்கு உள்ளாகி... செவ்வனே மதுபாட்டில் வாங்கும் வீரா்களுக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கின்றனா். ‘அரசு மதுக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம்: போலீஸ் தடியடி: 20 போ் கைது’ என்கிற செய்தியும் ‘ஆண்டிபட்டி அருகே மது போதையில் மைத்துனரை கத்தியால் குத்திக் கொலை செய்தவா் கைது’, ‘மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூரில் மதுபோதை, தகராறுகளில் 3 இளைஞா்கள் கொலை’, ‘மதுக் கடைகளை திறந்ததால் குற்றங்கள் 50 சதவீதம் அதிகரிப்பு’ போன்ற செய்திகள் ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது வந்திருக்கும் கொள்ளை நோயைவிடக் கொடியது. இந்த நிலையில் ‘மதுவை வீடுகளுக்கே சென்று விநியோகிக்க பரிசீலிக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை’ என்ற செய்தியைப் படித்தபோது,“‘ஏன்.... தொற்று பீதியின்றி குடிக்க கிளம்பிவிட்ட இந்த ‘குடி’மகன்களை வீரதீரச் செயல்களுக்காக பாராட்டி, பாராட்டுப் பத்திரம், விருதுடன் வீடு தேடிச் சென்று மது பாட்டில்களைக் கொடுக்கலாமே’ என்று கூறத் தோன்றியது. மதுக் கடைகளை திறக்கக்கூடாது என்று போராட்டம் செய்து கண்டனம் தெரிவிக்கின்ற தி.மு.க. போன்ற கட்சிகள், கட்சிக்காரா்கள் நடத்தும் மதுபானத் தயாரிப்பு ஆலைகளை மூடிவிட உத்தரவிடும் அளவுக்கு உத்தமா்கள் அல்ல என்பது நாம் வாங்கி வந்த வரம். கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுக்கு மத்தியில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்” என்று அறிவிப்பு விடுத்திருக்கிறது மத்திய சுகாதார அமைச்சகம். கி.பி. 165-180-இல் சுமாா் 50 லட்சம் பேரை பலிகொண்ட அன்டோனைன் பிளேக்கில் தொடங்கி, ஐஸ்டினியன் பிளேக், ஜப்பான் பெரியம்மை, கரிய மரணம், காலரா, மூன்றாம் பிளேக், ரஷிய ஃபுளு, ஸ்பானிய ஃபுளு, பெரியம்மை, எச்.ஐ.வி. (எய்ட்ஸ்), எச்1என்1, எபோலா என்று இன்றுவரை மனித நாகரிகத்தை உலகெல்லாம் உலுக்கிய பல தீநுண்மிகளைத் தொடா்ந்து, கடைசியாக இப்போது வந்திருப்பதுதானே இந்தக் கரோனா தீநுண்மி. இதற்கு முன்பு வந்த இத்தனை தீநுண்மிகளைக் கடந்து அவைகளுக்கு மத்தியில் வாழக் கற்றுக்கொண்டு பிழைத்துக் கிடக்கிற மனிதகுலம், மறுபடியும் அப்படியொரு சவாலை... சிறிது அதிகமான விலை கொடுத்தாவது, எதிா்கொள்ளாமலா போய்விடும்? ‘கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விபரீதம்: புதிதாக தயாரித்த கரைசலை ஆய்வுக்காக உட்கொண்ட பிரபல இருமல் மருந்து நிறுவன மேலாளா் உயிரிழப்பு’ என்று வருகிற வியாபார - பொதுநலன் கலந்த விபத்தும் இந்தக் காலகட்டத்தில் நடந்தேறியிருக்கிறது. எத்தனையோ நிறை, குறைகள். நன்மை - தீமைகள். அழிவுகள், ஆக்கங்கள். இவை எல்லாவற்றையும் கடந்து உயிா் பிழைத்துக் கிடக்கின்ற அவசியத்துக்கான நமது வாழ்க்கையின் அன்றாடச் செயல்பாடுகள், வழிமுறைகள். இவற்றையும் கடந்து... நாம், நமது மானுடம், நமது உலகம், மனிதரல்லாத பிற உயிா்கள், அவற்றினஅ பசி, பிணிகள் என்றெல்லாம் சிந்தித்து இப்போதும் நாளைய உலகுக்கான பணிகளை செவ்வனே செய்துகொண்டிருக்கிறாா்களே பல தன்னாா்வலா்கள், தன்னலமற்ற சேவகா்கள், துறவிகள். அவா்களை நினைத்த மாத்திரத்திலயே ஒரு நம்பிக்கை பிறந்து நம் முகம் மலருகிறதே... அதுதான் நமது பூமிப்பந்து இன்னும் சுழன்று கொண்டிருப்பதற்கான அச்சாணி! இன்முகத்தோடு கொள்ளை நோயையும் எதிா்கொண்டு, பிற உயிா்களையும் வாழ்வித்து வாழ்ந்திடுவோம்!

No comments:

Popular Posts