Friday 27 March 2020

பாதைமாறிப் போகிறதா பட்டிமன்றம்?

பேராசிரியர்.மா.ராமச்சந்திரன்

ச மய சான்றோர் கூடி ஆராய்வதற்கு ஏதுவாக இருந்த இடத்தை நம் முன்னோர் பட்டிமண்டபம் என்று குறிப்பிட்டனர். இந்த அடிப்படையிலேயே பட்டிமண்டபம் என்ற சொல் உருவாகியிருக்க வேண்டும். இதனால் சமய உண்மைகளை ஆராய்ந்து தெளிவதற்கு நிலை களமாக பட்டிமண்டபம் இருந்தது எனலாம். இதனை,

“ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்

பட்டி மண்டபம் பாங்கறிந்து ஏறுமின்” என்ற மணிமேகலை வரிகளாலும்,

“பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை

எட்டினோடு இரண்டும் அறியேனையே” என்ற மாணிக்கவாசகர் வரிகளாலும் உணரலாம்.

சமய உண்மைகளை உணர்த்தும் இடமாக விளங்கிய பட்டிமண்டபம் பின் நாளில், பல கலைகளை உணர்த்தும் கூடமாக விளங்கியது. இதனை, “கல்வி பயில்களம் பட்டிமண்டபம்” என்று பிங்கல நிகண்டு கூறுவதாலும், “பன்னருங் கலைதெரி பட்டி மண்டபம்” என்று கம்பர் கூறுவதாலும் தெளியலாம்.

தொடக்கத்தில் நிலையான ஓரிடத்தில் நிகழ்ந்த வாதங்களைக் குறிக்கும் வகையில் பட்டிமண்டபம் என்ற சொல்வழக்கு இருந்தது. இந்நாளில் பல இடங்களில் நிகழும் ஒரு அமைப்பாக மாறிவிட்டதால் “பட்டிமன்றம்” என்று வழங்கலாயிற்று. அதாவது பட்டிமண்டபம் என்னும் இலக்கிய வழக்கு, பட்டிமன்றம் என்று நடைமுறை வழக்காகி நிலைத்துவிட்டது. மொத்தத்தில் பட்டிமன்றம் என்பது ஒரு தர்க்க கலை. தான் கொண்டிருக்கும் கொள்கையை தக்க நிரூபணங்களுடன் வாதிட்டு நிறுவுகின்ற வாதக்கலை இது. எனவே பட்டிமன்றம் ஏறுவோர் பரந்த கல்வியும், நிறைந்த அறிவும், சிறந்த நுண்ணுணர்வும் உடையவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட திறன் உடையவர்கள்தான், தங்கள் வாதத்திறமையால் பட்டிமன்றத்தில் பிரகாசிக்க முடியும்.

சமய உண்மைகளைப் புலப்படுத்தும் வாதமுறையாக உருவான பட்டிமண்டபத்தை காலத்திற்கேற்ப, இலக்கிய இன்பத்தை வெளிப்படுத்தும் களமாக மாற்றித் தந்தவர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான். முதன்முதலில் காரைக்குடி கம்பன் விழாவில்தான் நவீன பட்டிமன்றத்தின் கால் ஊன்றப்பட்டது. இதிகாச, புராண, காப்பிய மாந்தர்களின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் தலைப்புகள் கொடுத்து, தக்க அறிஞர்களின் வாத, பிரதிவாதங்களின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்பட்டன. இது இலக்கிய ஆர்வலர்களுக்கு நல்ல தீனியாகவும், விருந்தாகவும் அமைந்தது. நாளடைவில் இந்த பட்டிமன்றச் சுவை படித்தவர், பாமரர் என்று எல்லா மக்களையும் பற்றிக்கொண்டு, பட்டிமன்றத்திற்கென்று மவுசை உண்டாக்கியது. அதன் விளைவாக கல்வி சாலைகள், கோவில் விழாக்கள் என்று பட்டிதொட்டியெல்லாம் பட்டிமன்றம் நடைபெறத் தொடங்கியது.

அறிவுக்கு விருந்தாக இருந்த பட்டிமன்றம், பொழுதுபோக்கு அம்சமாக மாறியபின் வீரியமான வளர்ச்சி பெற்றது. அதன் காரணமாக இலக்கியப் பொருளில் மட்டுமே நடைபெற்று வந்த வாதம் சமூகம், பொருளாதாரம், பக்தி, அரசியல், குடும்பம், திரைப்படம் என்று பல்வேறு பொருட்களில் நடைபெறத் தொடங்கியது. பொருளில் மட்டுமல்லாது, நகைச்சுவைப் பட்டிமன்றம், சிந்தனைப் பட்டிமன்றம், இசை பட்டிமன்றம் என்று அதன் பரப்பிலும் மாற்றம் உண்டானது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பல்வேறு பட்டிமன்றக் குழுக்கள் தோன்றலாயின. ஒவ்வொரு குழுவும், ஒவ்வொரு வகையில் தங்கள் ஆதிக்கத்தை பட்டிமன்றத்தில் நிலைநாட்டிக் கொண்டது. இந்தக் காலக்கட்டத்தில்தான் தொலைக்காட்சிகள் விழாக்கால சிறப்பு நிகழ்ச்சியாகப் பட்டிமன்றத்தை கையில் எடுத்துக் கொண்டன. தொலைக்காட்சியில் பட்டிமன்றம் ஒளிபரப்ப தொடங்கிய பின் அதன் வீச்சு இன்னும் அதிகமாகியது. தொலைக்காட்சியில் தெரிந்த முகமே சிறந்த பேச்சாளர் என்ற மாயையும் உண்டாகிவிட்டது.

‘இலக்கியத்தைப் பற்றியும், இலக்கியப் பாத்திரங்களைப் பற்றியும் தெளிவான எண்ணங்கள் ஏற்படுத்த வேண்டும்’ என்ற நோக்கில் எழுந்த பட்டிமன்றம், இப்போது சமூகப் பிரச்சினைகளையும் பேசு பொருளாக்கி, அலசி ஆராய்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சிக்கு உரியதுதான். காலத்திற்கேற்றவாறு பேசுபொருளில் மாற்றம் தேவைதான். ஆனால் அதற்காகத் தலைப்பையே உதாசீனப்படுத்திவிட்டுத் தாறுமாறாக பேசும் வழக்கம் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. ஆண்டாளையும், மாணிக்கவாசகரையும் மையப்படுத்தி தலைப்புக் கொடுத்த ஒரு பட்டிமன்றத்தில், ‘ஆண்டாளை குறைத்துப் பேச எனக்கு மனமில்லை’ என்று கூறி ஒருவர் பங்கேற்க மறுக்கிறார். ‘மாணிக்கவாசகரை குறைத்துப் பேச என் மனம் இடம் கொடாது’ என்று இன்னொருவர் பங்கேற்பை தவிர்க்கிறார். மறுத்துப் பேசுவதுதானே பட்டிமன்ற மரபு. அதில்தானே திறமை வெளிப்படும். அப்படியிருக்க, இவ்வாறு மறுப்புத் தெரிவித்து விலகியதில் என்ன சிறப்பு உள்ளது? என்று கேட்கலாம். பட்டிமன்றப் பொருளில் ஆழ்ந்த அறிவுடையோரை தெரிந்தெடுத்து, பங்கேற்க அழைக்கும் சிறப்பு அதில் அடங்கியுள்ளது. இத்தகைய உயர்ந்த மரபும்? வரலாறும் உடையது நம் பட்டிமன்றம்.

இப்போது அப்படியா நடக்கிறது? ஒவ்வொரு நடுவரும் ஒரு குழுவை வைத்துள்ளார். அதில் சிலர் நிலையான பேச்சாளர்களாக இருக்கின்றனர். எந்த ஊரில் பட்டிமன்றம் என்றாலும் அந்த குழுவே செல்கிறது. பதிவு பண்ணி வைத்ததுபோல் ஒரு ஊரில் சொன்ன கருத்தையே மற்ற ஊரிலும் சொல்லிவிட்டு போகிறார்கள்.

‘வாதத்திற்குத்தானே பேசுகிறோம். எதையும் பேசலாம். இதிலென்ன தவறு உள்ளது.’ என்று சமாதானப்படுத்திக்கொள்ளாது, வலிமையான கருத்துகளை வைத்து வாதிட்ட கொள்கை சிங்கங்கள் கர்ஜித்த மேடையில், ‘எப்படியும் பேசலாம்’ என்றாகிவிட்டது. இப்போது, இதுவே பட்டிமன்ற தர்மமாகிப் போனது. தனது கருத்தை வலியுறுத்தும் வகையில் ஏற்புடைய சிறு கதைகள் அல்லது நகைச்சுவை செய்திகளைச் சொல்வது பட்டிமன்றத்து நடைமுறைதான். அது பட்டிமன்றத்திற்குச் சுவைசேர்க்கும் வழிமுறை. அதற்காகத் துணுக்கு மூட்டைகளை அவிழ்த்துவிடுவது அழகல்ல. பட்டிமன்ற வாதத்திற்கு தொடர்பில்லாத, தனக்குத் தெரிந்த துணுக்குகளையெல்லாம் சொல்வது சரியாகப்படவில்லை. இப்படி அவலக் களமாகப் பட்டிமன்ற மேடை மாறிவிட்டது. அது மட்டுமா? பட்டிமன்றப் பேச்சாளரை, அவர் குடும்பத்தை தனிப்பட்ட முறையில் நையாண்டி செய்வது பட்டிமன்ற வாடிக்கையாகிவிட்டது. நகைச்சுவை விருந்தளிக்கும் கோமாளியாக நடுவரும் செயல்படவேண்டிய அவலம் பட்டிமன்றத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. நகைச்சுவை வேண்டும்தான், அதற்காக துணுக்குகளை அடுக்குவது நல்ல வாதமாகாது. உணவு ருசிக்க உப்பு வேண்டும்தான், அதற்காக உப்பையே யாரும் உணவாகக்கொள்வதில்லை. “மக்கள் விரும்புகிறார்கள். அதையே நாங்கள் கொடுக்கிறோம்” என்று சொல்லிக்கொண்டு, சிரிப்பையே பிரதானமாக கொள்வதெல்லாம் பட்டிமன்றத்தைப் பாதை மாற்றி அழைத்துச் செல்லும் பயணமாகும்.

1 comment:

New Jersey Arborists said...

Nice blog thanks foor posting

Popular Posts