Sunday 22 March 2020

உலகை நடுங்க வைத்த நோய்க்கிருமிகள்

மனித இனம் பரிணாம வளர்ச்சியை கண்டுள்ளது என்பதற்கு தற்போது நடக்கக்கூடிய காட்சிகளை உதாரணமாக கூறலாம். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கா கண்டத்தில் தோன்றிய ‘ஜிகா’ வைரசின் தாக்கம் இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டில் தான் காணப்பட்டது. ஆனால், 3 மாதத்திற்கு முன்பு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் 30 நாட்களில் இந்தியாவில் கால் ஊன்றிவிட்டது. இதற்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சி என்று சொல்வதா? அல்லது பரிணாம வளர்ச்சி கண்டுள்ள தொழில்நுட்ப முறைகளால் ஏற்பட்ட விளைவு என்று கூறுவதா?

தொழில்நுட்ப வளர்ச்சியின் மாற்றம் மனிதனையும் அவனது உணவுமுறை, கலாசாரத்தையும் மாற்றிவிட்டது. முன்னோர்கள் அந்த காலக்கட்டத்தில் மற்ற நாடுகளுக்கு பயணம் செய்தபோதும் அங்கே வைரஸ் நோய்கள் தாக்கி கொண்டுதான் இருந்தது. ஆனால், கடல் வழி பயணத்தில் உப்பு காற்றில் வைரஸ் தொற்று அழிகிறது என்று ஆய்வு நூல்கள் கூறுகின்றன. இதனால்தான் நமது முன்னோர்கள் அதிக நோய்களை எதிர்கொள்ள வில்லை என்கிறார்கள்.

ஆனால், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் நாமோ சொகுசாக விமானத்தில் பயணம் செய்கிறோம். கூடவே விதவிதமான நோய்களையும் கொண்டு வந்து விடுகிறோம்.2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உலக சுகாதார நிறுவனம் சார்பில் அதன் ஆண்டு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டம் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் இருக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்த டாக்டர்கள், வைராலஜிஸ்டுகள், பாக்டீரியாலஜிஸ்டுகள், நோய் தொற்றை கண்டறியும் நிபுணர்கள் என்று பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உலகை அச்சுறுத்தக்கூடிய நோய்களின் பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டது. அதில், கிரிமியன், காம்போ காய்ச்சல், எபோலா வைரஸ், லாசா காய்ச்சல், சார்ஸ் வைரஸ், மெர்ஸ் வைரஸ், நிபா வைரஸ், ஜிகா வைரஸ் என 8 கொடிய நோய்களை பட்டியலிட்டு இருந்த உலக சுகாதார நிறுவனம், 9-வது கொடிய நோயாக ‘எக்ஸ்’ என்பதை சேர்த்து இருந்தது.

இதில் ‘எக்ஸ்’ நோய் என்பது எங்கு இருந்து வருகிறது? எப்படி உருவாகிறது? என்று தெரியாது. ஆனால், சுனாமி போல் திடீர் என்று வந்து கொத்து கொத்தாக உயிர்ப்பலி வாங்கி சென்று விடும் என்பதால் புதுவகை நோய்க்கு ‘எக்ஸ்’ என்று பெயர் வைத்திருந்தனர். பொதுவாக கணித சமன்பாட்டில் ஒரு காரணியின் பகுதியில் எந்த தகவலை பற்றியும் அறியாதபோது அதை ‘எக்ஸ்’ என்று சொல்லுவது வழக்கம்.

அதன் அடிப்படையிலேயே பெயர் தெரியாத அந்த கொடிய நோய்க்கு ‘எக்ஸ்’ நோய் என்று பெயர் வைத்திருந்தனர். வரும் காலங்களில் மனிதகுலத்தை அச்சுறுத்தும் வகையில் அந்த நோய் இருக்கும் என்றும் கூறப்பட்டு இருந்தது. மேலும், இந்த ‘எக்ஸ்’ நோய் இயற்கையாக உருவாகலாம் அல்லது செயற்கையாக மனிதனால் உருவாக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இத்தகைய கொடிய நோய்களை பரப்பும் வைரசை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும், மருந்துகளை கண்டுபிடிக்கவும் பல மாதங்கள் ஆகும். இதற்கிடையே உள்ள காலகட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிடுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

2 ஆண்டுகளுக்கு முன்பு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை இன்று உண்மையாகி, வளர்ந்து வரும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் எரிமலை போல் வெடித்துக்கொண்டு இருக்கிறது.

கொரோனா வைரசால் சீனா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற நாடுகள் அச்சத்தில் அலறிக்கொண்டு இருக்கின்றன. புதிய வகை கொடிய நோய்கள் தாக்குவதும் அதன் தாக்கத்தால் அதிக மக்கள் பலியாவதும் இந்த உலகத்திற்கு புதிதானது அல்ல.

ஒவ்வொரு நூற்றாண்டிலும் அறியப்படாத நோய்கள் உருவாகி லட்சக்கணக்கான மக்களை உயிர்ப்பலி வாங்கி இருக்கிறது. இதில் குறிப்பிட்ட கால இடைவெளியில் உருவான கொடிய கொள்ளை நோய்களால் உலக வரலாறு தன் மீது கருப்பு வண்ணம் பூசிக்கொண்ட நிகழ்வு அதிகமாக உள்ளது.

பிளேக், காலரா...

கி.பி.1348-ம் ஆண்டு தொடக்கத்தில் பிரான்ஸ் நாட்டில் பரவியது ‘பிளேக்’ என்னும் கொடிய நோய். இந்த நோய் அப்போதைய காலக்கட்டத்தில் ஐரோப்பிய கண்டத்தில் சுமார் 5 கோடி மக்களை காவு வாங்கியது. இந்த நோயின் தாக்கம் பல்வேறு வகையில் இழப்புகளை ஏற்படுத்தியது.

அதன் பின்பு கி.பி. 1820-ம் ஆண்டு இந்தோனேசியாவில் பரவிய காலரா நோய் லட்சக்கணக்கான மக்களை பலி வாங்கியது. சுத்தமில்லாத உணவு மற்றும் அசுத்தமான தண்ணீரை குடிப்பதால் இந்த நோய் அதிகமாக பரவுகிறது. பல்வேறு நாடுகளை அலற வைத்த இந்த நோயின் தாக்கம் தற்போது வரை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் காணப்படுகிறது.

மக்களை கதறவிட்ட காலரா நோயில் இருந்து மீண்டு வருவதற்குள் எங்கு இருந்து பரவியது என்று தெரியாமல் 1920-ம் ஆண்டு வாக்கில் உலகம் முழுவதும் சுமார் 10 கோடி மக்களை பலிவாங்கியது ‘ஸ்பானிஷ் புளூ’ என்ற கொடிய நோய். இந்த நோய் சுமார் 2 ஆண்டுகள் உலகம் முழுவதும் தனது கோரா தாண்டவத்தை நிகழ்த்தியது.

இப்படி உலகம் முழுவதும் கொள்ளை நோய்கள் தங்களின் கோர முகத்தை காட்டி இருந்தாலும், 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே பல்வேறு வைரஸ் நோய்கள் மனித இனத்தை தாக்கி கொண்டுதான் இருக்கிறது.

சார்ஸ்

புதிய நோய்களின் நூற்றாண்டு கால இடைவெளி வரலாற்றை விட்டு நிரப்பும் விதமாக 2020-ம் ஆண்டு உலகிற்கு உலை வைத்து கொண்டிருக்கிறது, கொரோனா வைரஸ்.

21-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சீனாவின் மீது ஒரு துயரம் படிந்தது. எங்கு இருந்து வந்தது, எப்படி பரவியது, எதன் மூலம் ஏற்பட்டது என்று தெரியாமல் சீனாவில் தோன்றியது சார்ஸ் என்னும் நோய். 2003-ம் ஆண்டு ஜூலை மாதம் சீனாவின் குவாங்டன் மாகாணத்தில் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவை தாக்கிய சார்ஸ் உலக அளவில் 26 நாடுகளில் பரவி சுமார் 10 ஆயிரம் பேரை தாக்கியது. இந்த நோய்க்கு உலக அளவில் முதியவர்கள் தான் அதிகமாக உயிரிழந்தனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாதாரண காய்ச்சல் தசை பிடிப்பு, தலைவலியுடன் தொடங்கும் சார்ஸ் நோய் தொற்று ஏற்பட்ட 2-வது வாரத்தில் மூச்சு திணறலை ஏற்படுத்துகிறது. பின்னர் சுவாச பிரச்சினையை உருவாக்கி உயிருக்கு உலை வைக்கும். மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் சார்ஸ் நோயும் கொரோனா போன்று தோற்றம் கொண்டதாக அப்போது இருந்துள்ளது. சீனாவில் மட்டும் 800-க்கும் மேற்பட்டோரை பலிவாங்கியது.

இதுவரை சார்ஸ் நோய்க்கு எந்தவித மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அந்த நோய் தோன்றிய ஒரு வருடத்திலேயே அதன் தாக்கம் குறைந்ததாக கருதப்படுகிறது.

எபோலா...

1976-ம் ஆண்டு சூடானின் நிசாரா என்ற நகரில் அபாயகரமான எபோலா வைரசின் அத்தியாயம் தொடங்கியது.

நிசாரா நகரில் உள்ள பருத்தி ஆலையில் பணிபுரிந்த 4 பேர் அடுத்தடுத்து பலியானார்கள். இறந்த 4 பேருக்கும் தீவிர தலைவலி, காய்ச்சல், வாந்தி, நெஞ்சுவலி இருந்து வந்துள்ளது. நோய் தொற்று ஏற்பட்ட 5-வது நாள் அவர்களின் வாய், மூக்கு மற்றும் பல் ஈறுகளில் ரத்தம்வர ஆரம்பித்துள்ளது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் 5 பேரும் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

ஆனால், அந்த நோயின் அத்தியாயம் 4 இறப்புகளுடன் முடியவில்லை, 4 பேருக்கு சிகிச்சை அளித்த நர்சுகள், பராமரித்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்று பலரையும் தொற்றிக்கொண்ட புதுவகையான அந்த எபோலா நோய் அவர்களையும் காவு வாங்கியது. நிசாராவில் உயிரை குடிக்கும் நோய் ஒன்று உக்கிரமாக பரவி கொண்டு இருந்தவேளையில் அதைப்பற்றி அறியாத பாமர மக்களில் 2 பேர் 128 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மரிடி என்ற நகரத்திற்கு சென்றனர். மரிடியில் இருக்கும் போது ஒருவருக்கு தொடர்ந்து தலைவலி மற்றும் காய்ச்சல் இருந்துள்ளது.

இதையடுத்து ஆஸ்பத்திரிக்கு சென்ற அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இறுதியில் அவருக்கு எபோலா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள், மற்றும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்து வெளி மற்றும் உள் நோயாளிகளுக்கு இந்த ஆட்கொல்லி நோய் தொற்று வேகமாக பரவியது.

எபோலா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 50 சதவீதம் மக்கள் உயிரிழந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் உடனடியாக தனது ஆய்வுக்குழுவை மரிடி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைத்தது. மரிடி ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த 153 நர்சுகளில் 61 பேருக்கு எபோலா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இறுதியில் 31 பேர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர். நோயாளிகளிடம் நெருங்கி பழகிய உறவினர்கள், நர்சுகள் மற்றும் அருகில் சென்ற மற்ற நபர்களுக்கும் நோய் தொற்றிக்கொண்டதை அறிந்த ஆய்வுக் குழுவினர் நோயாளிகளை தனிமைப்படுத்தி வைத்தனர்.

ஆஸ்பத்திரியில் பணியாற்றும் சுகாதார பணியாளர்களுக்கு கையுறை, முக கவசங்கள், பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்ட பின்னர் நோய் தொற்று பரவுவது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த சமயத்தில் காங்கோவின் யாங்குக்பு நகரத்தில் உள்ள கத்தோலிக்க ஆஸ்பத்திரியில் 20-க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஒரே நோய் தொற்று அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டனர். 5 நாட்களில் நோயின் தாக்கம் அதிகரித்த நிலையில் அனுமதிக்கப்பட்ட 20 பேரில் 14 பேர் பலியானார்கள். பின்னர் ஆஸ்பத்திரியில் பணியாற்றிய பணியாளர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் பாரம்பரியமிக்க கத்தோலிக்க ஆஸ்பத்திரி மூடப்பட்டது.

எபோலா நோய் தொற்றிக்கொண்ட 80 சதவீத மக்கள் உயிரிழந்த நிலையில் யாங்குக்பு நகருக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டது. மக்கள் நகருக்குள் வருவதற்கும் போவதற்கும் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவ ஆய்வுக்குழு நோய் தொற்றை கட்டுப்படுத்தியது. தொடர்ந்து ஆய்வில் இருந்த மருத்துவ குழு நோய் எப்படி உருவானது என்று கண்டுபிடித்தது.

காங்கோ குடியரசில் உள்ள யாங்குக்பு நகருக்கு அருகில் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எபோலா என்ற ஆற்றங்கரையில் உள்ள வவ்வால்கள், மனித குரங்குகளிடம் இருந்து அந்த வைரஸ் தொற்று மனிதனுக்கு பரவியது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் நோய்க்கு அந்த ஆற்றின் பெயர் வைக்கப்பட்டது. உணவு, தண்ணீர், காற்று மூலம் எபோலா பரவாது. ஆனால், நோய் தொற்று தாக்கிய ஒருவரின் வியர்வை, எச்சில், கண்ணீர், சிறுநீர், ரத்தம், விந்து போன்றவை மற்றவர்களின் உடலுக்குள் செல்வதால் எபோலா தொற்று பரவுகிறது. மேலும், எபோலா வைரஸ் தொற்று தாக்கிய விலங்குகளின் இறைச்சியை சாப்பிடுவது, நோய் தொற்று தாக்கியவர்களின் சடலத்தை தொடுவது ஆகிய செயல்கள் எபோலா தொற்றுக்கு தொடக்க புள்ளியாக அமைகின்றது.

இந்த நோய் தொற்று ஒரு பாரம்பரிய முறை நோய் தொற்று போல் நாடு முழுவதும் பரவியது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை லைபீரியா, கினியா, சியாரா லியோன் பகுதிகளில் தீவிரமாக பரவிய எபோலா வைரஸ் தொற்று 11 ஆயிரத்து 300 பேர் உயிரை காவு வாங்கியது. மத்திய ஆப்பிரிக்க பகுதியில் கடந்த ஆண்டு (2019) ஆகஸ்டு மாதத்தில் 1,800 பேரின் உயிரை குடித்துள்ளது, எபோலா வைரஸ். 40 ஆண்டுகளுக்கு மேலாக பல லட்சக்கணக்கான மக்களை பலிவாங்கிய எபோலா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது கசப்பான உண்மை.

ஜிகா...

2017-ம் ஆண்டு உலக அரங்கில் அதிகமாக 86 நாடுகளுக்கு பரவிய ஜிகா வைரஸ் தமிழ்நாட்டையும் பதம் பார்த்தது. காய்ச்சல், முதுகுவலி காரணமாக ஆஸ்பத்திரிக்கு வந்த கிருஷ்ணகிரி வாலிபருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் தான் ஜிகா வைரசையும் பரப்புகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஜிகா வைரஸ் உலகத்திற்கு புதிய வைரஸ் கிடையாது.

1947-ம் ஆண்டு ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள உகாண்டாவில் உள்ள ஜிகா வனப்பகுதியில் வசித்த ‘ரீசஸ் மக்காக்’ இன குரங்குகளிடம் இந்த வகையான வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த வனத்தின் பெயரே இந்த வைரசுக்கும் பெயராக்கப்பட்டது. 1952-ம் ஆண்டு உகாண்டா மற்றும் தான்சானியாவில் உள்ள மனிதருக்கும் இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 2015-ம் ஆண்டு உலகில் பல நாடுகளில் பற்றிக்கொண்ட ஜிகா வைரஸ் 2 ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கு வந்து சேர்ந்தது. ஆனால், ஜிகா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் உயிர்ச்சேதம் சற்று குறைவுதான் இருந்தாலும் கர்ப்பிணிகளுக்கு இந்த நோய்த்தொற்று அபாயமான ஆபத்தை ஏற்படுத்தியது.

ஒரு பெண் கர்ப்பம் அடைந்த முதல் 3 மாதங்களில் அந்த பெண்ணுக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருந்தால் அவருக்கு பிறக்கும் குழந்தைக்கு நரம்பியல் பிரச்சினை ஏற்படுகிறது. மரபணு பிரச்சினைகளும் அதிகமாக ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

இந்த நோய் தாக்கிய 5 பேரில் ஒருவருக்கு மூளை செயல் இழந்து விடுகிறது. கண் எரிச்சல், தோல் சிவத்தல், தொடர் வாந்தி போன்றவை இந்த நோய்க்கு அறிகுறியாக பார்க்கப்படுகிறது. மற்ற வைரஸ் தொற்றுகளை போலவே ஜிகா வைரஸ் தொற்றுக்கும் இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

மெர்ஸ்...

உலகை உலுக்கிய எபோலாவின் உடன்பிறப்பாக மக்களை கதற விட்ட நோய் மெர்ஸ். மத்திய கிழக்கு நாடுகளில் தனது தோற்றத்தை உருவாக்கி கொண்டது மெர்ஸ். சாதாரண காய்ச்சலுடன் தொடங்கும் இந்த நோய் தலைவலி, வாந்தி, வயிற்று போக்கு என்று நீண்டு நிமோனியாவின் அறிகுறிகளுக்கு மாற்றம் அடைகின்றது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபருக்கு சுவாச கோளாறு ஏற்படும் போது அவரை மரணத்தின் வாயிலுக்கு மெர்ஸ் கொண்டு செல்கிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் கண்டறியப்பட்ட இந்த நோய் தற்போது உலகம் முழுவதும் 23 நாடுகளில் பரவி இருக்கிறது. சவுதி அரேபியாவில் நோய் தாக்குதலுக்கு ஆளான நபரை பரிசோதித்த எகிப்து வைரலாஜிஸ்டு அலி முகமது சகி என்பவர் புது வகையான வைரஸ் ஒன்றை கண்டுபிடித்தார்.

இதே அறிகுறியுடன் 2-வதாக ஒருவர் செப்டம்பர் மாதம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு பாரபட்சம் இன்றி பரவத்தொடங்கியது மெர்ஸ் நோய். சவுதி அரேபியாவில் 44 வயதான நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு சொந்தமாக 9 ஒட்டகங்கள் இருந்தது. நோய் தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு அவர்தான் அந்த ஒட்டகங்களை பராமரித்து வந்துள்ளார். அப்போது ஒட்டகங்களுக்கான மருந்தை அவற்றின் மூக்கு வழியே அவர் கொடுத்துள்ளார். இதையறிந்த டாக்டர்கள் அவரின் உடலில் இருந்தும், ஒட்டகங்களின் உடலில் இருந்தும் மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்துள்ளனர்.

இறுதியில் இரண்டு மாதிரிகளில் இருந்த வைரசும் ஒரே அமைப்பை கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. முதலில் இந்த நோய் விலங்கினங்களுக்கு பரவுகிறது. தொடர்ந்து விலங்குகளிடம் அதன் வீரியம் அதிகரித்து மனிதர்களுக்கும் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது.

மெர்ஸ் நோய் தாக்கிய நபருடன் 6 நாட்கள் தொடர்ந்து இருந்தால் மற்றவர்களுக்கும் மெர்ஸ் நோய் தாக்கிவிடுகிறது. கோர தாண்டவம் ஆடிய இந்த நோய் சவுதி அரேபியாவில் இதுவரை 700-க்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கியது. நோயின் பரவல் தன்மை அறிந்து நோய் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த அபாயகரமான நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

நிபா...

உலகை உலுக்கிய பல வைரஸ்களில் நிபா வைரசும் ஒன்றாகும். இது இந்தியாவையும் இறுக்கி பிடித்துக்கொண்டது. 1998-ம் ஆண்டு மலேசியாவில் பலர் காய்ச்சல், கழுத்துவலி, உடல் சோர்வு மற்றும் சுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக பன்றி பண்ணையில் பணி புரிந்த நபர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டனர். நோய் தொற்றின் அறிகுறிகளை கொண்டு முதலில் ஜப்பானிய காய்ச்சலான ‘ஜப்பானிஷ் என்சோ பாலிட்டிஸ்’ என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஆனால், நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 சதவீதம் பேர் உயிரிழந்த நிலையில் மர்ம மரணங்களுக்கு விடை தேடத் தொடங்கினர் விஞ்ஞானிகள். 1999-ம் ஆண்டு மலேசியாவில் ஏற்பட்ட மரண ஓலங்களுக்கு முக்கிய காரணம் நிபா வைரஸ் என்று கண்டுபிடித்தனர். சுங்கை நிபா என்ற இடத்தில் ஒருவரின் உடலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த வைரஸ் தொற்றுக்கு நிபா வைரஸ் என்று பெயர் சூட்டப்பட்டது. விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவியதற்கு மூல ஆதாரமாக பழந்தின்னி வவ்வால்கள் இருந்திருக்கின்றது.

மலேசியாவில் வவ்வால் மூலம் பரவிய நோய், பன்றிகளுக்கும் பரவி உள்ளது. பின்னர் பன்றிகளிடம் இருந்து மனிதர் களுக்கு தொற்றிக் கொண்டதாக தெரிகிறது. வவ்வால் கடித்த பழங்களை சாப்பிட்டவர்களுக்கு உடனடியாக நிபா வைரஸ் தொற்று தாக்கியது. தொடுதல், இருமல் மூலமாக மற்ற மனிதர்களுக்கும் இந்த நோய் வேகமாக பரவியது.

2018-ம் ஆண்டு கேரளாவில் உள்ள மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவியது. 17 பேரை பலி கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் தீவிர தடுப்பு நடவடிக்கையால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால், மற்ற வைரஸ் தாக்குதலை போல நிபா வைரஸ் தாக்குதலுக்கும் இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆசிய நாடுகளில் மட்டும் இந்த நோய் 300-க்கும் மேற்பட்டோரை காவு வாங்கியது. மேலும் நிபா வைரஸ் தாக்கியவர்களில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

கொள்ளை கொரோனா...

2019-ம் ஆண்டின் இறுதியில் புதிய ஆண்டை கொண்டாட தயாராக இருந்த சீனர்களை புரட்டி போட்டது கொரோனா வைரஸ். சளி, காய்ச்சலில் தொடங்கி பலரின் உயிர்ப்பலிக்கு கொரோனா காரணமாக அமைந்தது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். வைரஸ் குடும்பத்தை சேர்ந்த கொரோனா புதிய வகை வைரஸ் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதை கண்டுபிடித்த நிபுணர்கள் குழு அதற்கு நோவல் கொரோனா வைரஸ் என்று பெயர் வைத்தனர்.

தற்போது சீனாவை சீண்டி உலகை உலுக்கி வருவது கொரோனா குடும்பத்தில் பிறந்த 7-வது ரக கொரோனா வைரஸ் ஆகும். இதற்கு முன் தாக்கிய அனைத்து வைரஸ் நோய்களும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டது தான். அந்த நோய்களுக்கு பல்வேறு வைரஸ் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட நோய்க்கு இதுவரை எந்த பெயரும் வைக்கப்படவில்லை. எனவே, அது இன்று வரை நோவல் கொரோனா வைரஸ் என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

இதுவரை உலகம் கண்ட பெரிய வகை வைரஸ் நோய்கள் எல்லாமே சளி, காய்ச்சல் போன்ற சாதாரண பாதிப்புகளில் இருந்துதான் தொடங்கி இருக்கிறது.

மேலும், பெரும்பாலான உயிர் இழப்புகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் முதியோர்களுக்குத்தான் ஏற்படுகிறது. இதுவரை உலக அரங்கில் தோன்றிய வைரஸ் தொற்று நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் பயன்பாட்டில் உள்ள மருந்துகளை வைத்து மட்டுமே கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது நிதர்சனம்.

வைரஸ் தொற்று பாதிப்புள்ள நபர்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு நாடுகளில் இருந்து தன்னார்வ மருத்துவர்கள் தன்னலம் கருதாமல் சீனா சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது போன்ற மனித நேயம் இருக்கும் வரை உலக அரங்கில் எந்த வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ளும் திறன் மனித குலத்துக்கு உள்ளது என்பதே உண்மை.

No comments:

Popular Posts