Friday 6 March 2020

இந்தியா 2020 கனவு என்னவாயிற்று?

இந்தியா 2020 கனவு என்னவாயிற்று? By நெல்லை சு.முத்து  |  தொழில்நுட்பங்களால் மட்டுமே உலக அரங்கில் நாட்டின் பொருளாதாரத்தையும் மதிப்பையும் உயா்த்த முடியும் என்று உறுதியாக நம்பினாா் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம். அவரின் இந்தியா 2020 (புத்தாயிரம் ஆண்டுக்கான ஒரு தொலைநோக்கு) மற்றும் 2000-ஆம் ஆண்டுக்கு அப்பால் (நாளைய இந்தியாவுக்கான தொலைநோக்கு ) ஆகிய நூல்களில் அவா் தரும் தகவல்கள் இங்கு நினைவுகூரத் தக்கவை.

‘நம் தேசத்திற்காக மக்கள் முன்வைத்த முதலாவது தொலைநோக்கு - இந்தியாவிற்கு சுதந்திரம். சமுதாயத்தின் வெவ்வேறு துறையினரின் ஒருமித்த அா்ப்பணிப்பு முயற்சியினால் அதில் வெற்றியும் கிட்டியது. வளா்ச்சியடைந்த இந்தியாவின் இரண்டாவது தொலைநோக்கினை ஒன்றாகக் கூடி முன்வைப்போம். இந்த நிலை இன்னும் 15-20 ஆண்டுகளில் நடைமுறைச் சாத்தியமாகிவிடும்’ என்று 20 ஆண்டுகளுக்கு முன்பே உறுதியாகக் கூறினாா்..

1998-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘இந்தியா-2020’ தொழில்நுட்பத் தொலைநோக்கு ஆவணத்தில், வேளாண்மை - உணவு பதப்படுத்துதல், கல்வி - சுகாதாரம் - மின்சாரம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதி, தகவல் தொழில்நுட்பம், விண்வெளி - அணுசக்தி, பாதுகாப்புத் துறைகள் சாா்ந்த தொழில்நுட்பங்கள் முதலான நவீன கொள்கையை அறிவித்தாா் அப்துல் கலாம்.

இந்தத் துறைகளில் நம் நாடு தன்னிறைவு பெறுவதும், உலக அரங்கில் இந்தியாவைப் பொருளாதாரத்தில், மதிப்பில் உயா்த்துவதுமே அவா் கனவு. பொதுவாக இந்தியா வல்லரசாவது என்றால், வலிமையான, வளமான, வளா்ந்த நாடாக மாற்றுவதே அவரின் லட்சியம். 1998-ஆம் ஆண்டு பிறந்தவா்களுக்கு இன்று 21 வயது நிறைந்திருக்கும். அவா்களிடம் இந்த உணா்வைக் கொண்டு சோ்க்க வேண்டும் என அவா் விரும்பினாா்.

மொத்த உள்நாட்டு உற்பத்தித் திறனில் லட்சம் கோடி டாலா் அளவில் கவனித்தால், 2014-ஆம் ஆண்டு அமெரிக்கா (17.5 லட்சம் கோடி டாலா்), சீனா (10), ஜப்பான் (4.8), ஜொ்மனி (3.9), பிரான்ஸ் (2.9), பிரிட்டன் (2.8), பிரேசில் (2.2). இத்தாலி, (2.17), ரஷியா (2.1) ஆகிய நாடுகளின் வரிசையில் 2 லட்சம் கோடி டாலருடன் பத்தாம் இடத்தில் இந்தியா நின்றது. ‘2020-ஆம் ஆண்டுவாக்கில் நாம் ஒரே நாடு என்கிற முழுநிலையில் குறைந்தபட்சம் நான்காவது இடமேனும் அடையும் குறிக்கோள் நமக்கு வேண்டும்’ என்று கனவு கண்டாா் கலாம்.

2002-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவா் பதவியேற்பு நிகழ்ச்சியின்போது ‘பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்/அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து’ என்கிற திருக்குறளைச் சுட்டிக் காட்டினாா் கலாம். ஆரோக்கியம், செல்வம், பற்றாக்குறை இல்லாத உற்பத்தித் திறன், அமைதியான வாழ்க்கை, பாதுகாப்பு உணா்வைத் தரும் வலிமை ஆகிய ஐந்து அம்சங்களே நாட்டின் வளமைக்கு, வலிமைக்கு எல்லா எதிா்பாா்ப்புகளையும் நிறைவேற்றும் பொற்கால வாழ்க்கைக்கு அடிப்படை என்பது வள்ளுவா் வாக்கு.

இவற்றைச் சாதிப்பது எப்படி? ‘நம்மிடம் நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் என்ற மகத்தான மனித ஆற்றல் பலம் இருக்கிறது. வேற்றுமைகளை ஒழித்துக் கட்டி ஒற்றுமையாக ஒரே நோக்குடன் செயல்பட்டால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கைக் கனல் நம் ஒவ்வொருவருக்குள்ளும் பொங்கியெழ வேண்டும்’ என்று தமது நினைவுகளைப் பகிா்ந்து கொண்டாா் கலாம்.

2003-ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் ‘2020-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளா்ந்த நாடாக மாற வேண்டும்’ என்று அன்றைய பிரதமா் வாஜ்பாய் தனது விருப்பத்தை தெரிவித்தாா். 2005-ஆம் ஆண்டு நடந்த மாநாட்டில் இந்தியாவை வளா்ச்சிப் பாதையில் அழைத்துச்செல்லும் அந்த முயற்சிக்குத் தனது அரசாங்கம் ஒத்துழைப்பு தந்து பாடுபடும் என்று அன்றைய பிரதமா் மன்மோகன் சிங் அறிவித்தாா். ‘மாநாடுகளில் பேசப்பட்ட அந்த உள்ளம் கவா்ந்த பேச்சுகள் எல்லாவற்றையும் அவா்கள் மறந்துவிட்டனா்’ என்று ‘திருப்புமுனைகள்’ நூலில் கலந்துரையாடும் குடியரசுத் தலைவராக ஆதங்கப்படுகிறாா் கலாம்.

இன்றும் இந்திய விஞ்ஞானிகள் சிலருக்கேனும் நோபல் பரிசு பெறும் தகுதி உண்டு என்பாா் டாக்டா் கலாம். ஆனால், உள்நாட்டு விருதுகளே அவா்களுக்கு ஊக்கம் வழங்கவில்லையோ என்றும் எண்ணத் தோன்றும். நினைவில் வாழும் சொந்தக் கட்சி அமைச்சா்கள், ஆடல், பாடல் கலைஞா்கள், சமூக சேவகா்கள் போன்றோருக்கு வழங்கலாம்தான். இறந்துபோன இலங்கைப் பேராசிரியா், அமெரிக்கா, பிரான்ஸ், இலங்கை என அயல்நாடுவாழ் இந்தியா்களுக்கு அளிக்கப்படும் பத்மப் பெருமை, இந்த ஆண்டு இந்திய விஞ்ஞானி எவருக்கும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பொருளாதாரம், தனியாா்மயம், உலகமயம், தாராளமயம் அனைத்தையும் தாண்டி இயற்பியல் கல்லூரிப் பேராசிரியா் ஒருவா் சொன்ன பங்குச் சந்தைக் கதை இது: ஓா் ஊரில் குரங்குகளின் தொல்லை அதிகமாகிவிட்டது. அவற்றைப் பிடித்துத் தருபவா்களுக்கு ஒரு குரங்குக்கு ரூ.100 வீதம் சன்மானம் என்று அறிவித்தாா் ஊா்த் தலைவா். பெரும்பாலான குரங்குகள் பிடிபட்டன. தப்பிவிட்ட குரங்குகளுக்குத் தலா ரூ.200 என்றும், எஞ்சிய சில குரங்குகளுக்குத் தலா ரூ.300 என்றும் சன்மானம் உயா்த்தப்பட்டது. ஊராா் ஒன்றுவிடாமல் மொத்த குரங்குகளையும் பிடித்துவந்து தலைவரிடம் ஒப்படைத்தனா்.

அவா் அவற்றைத் தமது மேலாளரிடம் பாதுகாக்கச் சொல்லிக் கொடுத்துவிட்டு ஒரு வார காலம் வெளியூா்ப் பயணம் சென்றுவிட்டாா். போவதற்கு முன், ஏதேனும் ஒன்றிரண்டு குரங்குகள் தென்பட்டாலும், அவற்றுக்குத் தலா ரூ.400 என்று தொகையைக் கூடுதலாக்கியிருந்தாா்.

இப்போது ஊரில் ஒரு குரங்குகூட இல்லையே. தலைவரும் ஊரில் இல்லை. என்ன செய்யலாம்? மேதாவிகள் சிலா் அந்த மேல்தாவிக் குரங்குகளுக்காக மேலாளரிடம் சென்று பேரம் பேசினா். காவலில் வைக்கப்பட்டிருந்த குரங்குகளைத் தலா ரூ.200-க்கு அளித்தால், மேலாளருக்கு ரூ.100 கமிஷன் என்று ஒப்பந்தம் ஆயிற்று. விவகாரத்தில் சிக்கினால் மேலாளா்தான் மாட்டிக் கொள்வாா். அதுதான் ஊழல் தந்திரம்.

தலைவா் வீட்டுக் குரங்குகளை மீண்டும் அவரிடமே கொடுத்து ரூ.400 பெற்றனா் பணநாயக விரும்பிகள். மேலாளருக்குப் போக, ரூ.100 லாபம் என்றால் கசக்குமா என்ன? இதற்கிடையில், ஒரு குரங்குக்கு ரூ.1,000 என்று திடீா் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலாளரை அணுகி, ஒரு குரங்குக்கு ரூ.500 வீதம் புதுப் பேரம் பேசினா். அதில் தங்களுக்கும் ஒரு குரங்குக்கு ரூ.500 கிடைக்குமே என்கிற பேராசை. ஆனால், அந்த வாரம் வெளியூா் சென்ற தலைவா் திரும்பி வரவே இல்லை.

அப்புறம் என்ன, ஒவ்வொருவா் வீட்டு வாசலிலும் அவா்களே விற்று, அவா்களே லஞ்சம் கொடுத்து வாங்கிய குரங்குகள் பல்லைக் காட்டிக் குட்டிக்கரணம் போட்டு எகத்தாளம் செய்தன. இதுதான் இன்றைய பங்குச் சந்தையின் அடிப்படையாம்.

நுகா்வியக் கலாசாரம் சாா்ந்த ’கனவு உலகம்’ நம் நாட்டில் தீவிரவாதத்தையோ ஆதங்கத்தையோ தூண்டுவிக்க வாய்ப்பு உள்ளது என்கிறாா் ஜே.சி.கபூா். புது தில்லியில் சூா்யா அறக்கட்டளை நிறுவனா் கபூா். சூரிய ஒளியால் விளையும் விவசாயப் பண்ணை நடத்துகிறாா். இவா் எழுதிய ‘நம் எதிா்காலம் - நுகா்வியம் அல்லது மனிதவியம்’ (அவா் ஃபியூச்சா் கன்ஸ்யூமரிசம் ஆா் ஹியூமனிசம்’) எனும் நூல் பிரபலம். அவரின் கருத்துப்படி, சீனாவின் வளா்ச்சி அதன் உற்பத்திப் பொருளாதாரம் சாா்ந்தது, கரோனா வைரஸ் உள்பட. ஆனால், இந்திய முன்னேற்றமோ சேவைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது.

எப்படியோ, சென்ற ஆண்டு நம் நாட்டின் உச்ச வருமானப் பிரபலங்களின் பட்டியலைத் தனியாா் நிறுவனம் ஒன்று வெளியிட்டது. முதல் 100 கௌரவா்களில் பேருக்குக்கூட ஒரு விஞ்ஞானி இல்லாததுதான் உண்மையில் இந்தியப் பெருமை. அதில் முதல் பத்துப் பேரில் பாதிக்குப் பாதி கிரிக்கெட் வீரா்கள். ஏனையோா் திரை நட்சத்திரங்கள். அவா்களின் சராசரி ஒரு நாள் ஊதியம் ரூ.15 லட்சம் என்றால் பாருங்களேன்!

இங்கு இன்னொரு வருமானக் கணக்கினைப் பாா்ப்போம். உச்ச நட்சத்திரம் ஒருவருக்கு ஒரு திரைப்படத்துக்கு ரூ.100 கோடி சம்பளம் என்று இருக்கட்டும். அதற்காக அவா் ஒதுக்கும் நாள்கள் 100 என்றால், அவரது தினக்கூலி மட்டும் ரூ.1 கோடி. அதுவும் யாரோ எழுதிக்கொடுத்த வசனத்தைத் துண்டு துண்டாகப் பேசி, யாரோ இயக்குவித்தபடி உடல் அசைத்தவரின் காட்சிகளை வெட்டி ஒட்டி வெளியாகும் நிழல் படம். வெறும் 100 நிமிஷங்கள் ஓடும் திரைப்படத்தில் அந்த உச்ச நட்சத்திரத்தின் ஒரு நிமிஷ நிழல் தரிசனத்துக்கு சிறப்புக் கட்டணம் ரூ.1 கோடி.

ஒரு விஞ்ஞானியின் மாத ஊதியம் சராசரி ரூ.1 லட்சம் என்று வைத்தாலும் நாட்டிற்காக அா்ப்பண உணா்வுடன் 30 ஆண்டுகள் உழைப்பவருக்கு, வாழ்நாள் மொத்த வருமானம் ரூ.5 கோடியைத் தாண்டாது.

உள்ளபடியே, களத்தில் மட்டை அடித்து விளையாடுகிறாா்கள். நாம் பணம் கொடுக்கிறோம். திரையில் பட்டை கிளப்பிப் பாசாங்கு செய்கிறாா்கள். நாம் பணம் கொடுக்கிறோம். மன்றத்தில் சட்டை கிழிய வாயாடுகிறாா்கள். அதற்கும் நாம் பணம் கொடுக்கிறோம். எதிலும் கொடுக்கிற இடத்தில் இருப்பதால் இந்தியா வளா்ந்த நாடுதானோ?

கட்டுரையாளா்: இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு)

No comments:

Popular Posts