Sunday 16 February 2020

நான் 'தலித்' அல்ல!

நான் 'தலித்' அல்ல! By கே.பி. மாரிக்குமார்  |   இன்று அனைத்துத் தளங்களிலும் எந்தவிதக்  குற்ற உணர்வுமின்றி  சட்டத்துக்கு விரோதமான "தலித்' என்ற சொல் பரவலாகப்  பயன்படுத்தப்படுகிறது; சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும், நம் நாட்டின் கால் பங்குக்கும் மேலானோர் இன்னும் விடுதலை பெறவில்லை என்பதை இது பறைசாற்றுகிறது.
காட்சி ஒன்று: நான் "தலித்'அல்ல!
மத்திய அரசுத் தேர்வாணையம் நடத்திய தேர்வு ஒன்றில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வுக்கு செல்வதற்கு முன், மாதிரி நேர்முகத் தேர்வில் அவரின் ஜாதி குறித்து  நாம் கேட்ட கேள்விக்கு, இந்திரமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அளித்த பதில் இது.

சார்! என் ஜாதி பட்டியலினத்தில் வருகிறது. அந்த வகையில் எனது இடஒதுக்கீட்டு வகைமை(Category)  எஸ்.சி., அப்புறம் ஏன் சார் "நீ "தலித்'தான்னு என்னை கேட்டீங்க?
இல்லம்மா.... அப்படித்தானே நடைமுறையில இருக்கு?'
"நடைமுறையில் இருக்கா, சட்டத்தில் இருக்கா?... என் அடையாளத்தை மறைச்சு, என் ஜாதிப் பெயரை மாத்துற அதிகாரத்தை யாரு சார் உங்களுக்குக் கொடுத்தது?, சீறினாள் இந்திரமதி.

காட்சி இரண்டு: அவர் ஒரு பிரபல பத்திரிகையாளர்.
"ஏன் அரசியலமைப்புச் சட்டத்தில் எங்குமே இடம்பெறாத "தலித்' என்கிற வார்த்தையால்  பட்டியலினத்தவரை அடையாளப்படுத்துகிறீர்கள்' என்பது கேள்வி.
"பட்டியலினம், ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்றெல்லாம் எழுதினால் ரொம்பப் பெரிசா இருக்கு சார். "தலித்' மூன்றே எழுத்து...ரொம்ப எளிதாக இருக்கு' என்று  சாமர்த்தியமான பதில் ஒன்றை அளித்தார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை(Preamble), ஓர் இந்தியனுக்கு கொடுத்திருக்கிற  சுதந்திரத்தையும் கண்ணியத்தையும், இந்த "தலித்' என்கிற சொல்லுக்கான பொருளோடு ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு இந்திரமதியின் கேள்விகளால் விளைந்த இந்தக் கட்டுரையின் நோக்கத்தை நாம் உள்வாங்குவதே சரியாக இருக்கும்.

"தலித்' என்கிற சொல்லின் பொருள், "நொறுக்கப்பட்டவன்', "நசுக்கப்பட்டவன்',  "அமுக்கப்பட்டவன்' என்கிற அர்த்தத்தில் நீள்கிறது.
இன்று பட்டியலினத்தவர்களுக்கான மாற்றுப் பெயராக புரிந்துகொள்ளப்படும் இந்தச்சொல்லுக்கு சம்ஸ்கிருத வார்த்தையான "தல' என்பதே வேர்ச்சொல் என்றும், இல்லை இது ஹிந்தி வார்த்தை என்றும், அரேபிய வார்த்தை என்றும், ஒரு சிலரால் மராத்திய வார்த்தை என்றும் சொல்லப்படுகிறது.

இந்தச் சொல் முதன்முதலாக ஜோதிபாய் புலேவால் அறிமுகப்படுத்தப்பட்டது என்கிற கருத்தும் உண்டு. இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 336 உட்பிரிவு  24-இல் அட்டவணை ஜாதியினர் (S.C. - Scheduled Caste)பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பிரிவு 341 (1) யாரெல்லாம் பட்டியல் இனமாகக் கருதப்படலாம் என்பதை முடிவு செய்வதில் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தை விவரித்துள்ளது.

மத்திய சட்ட அமைச்சகம் தங்களது 3-5-2006 தேதியிட்ட கடிதத்தின் மூலம் ( எண் 10432/08/ADV. "A' ) "தலித்' என்கிற சொல் அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை என்று  உறுதியாகக் கூறியுள்ளது. தேசிய அட்டவணை ஜாதியினருக்கான ஆணையம் (NCSC) தங்களது 27-11-2007 /எண் 6/6/NCSCஇ /2007 இ. இந்தக் கடிதத்தின் மூலம் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் "தலித்' என்கிற சொல், பட்டியல் இனத்தவரைக் குறிப்பிடுவதற்கு மாற்றாக பயன்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளது.

தமிழக அரசு தனது 24-1-2007 தேதியிட்ட அரசாணை (2D) எண் : 2  மூலம் தேசிய அட்டவணை ஜாதியினருக்கான ஆணையத்தின் கருத்தையே தமிழக அளவில் வலியுறுத்தியுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தில் எங்குமே பட்டியலினத்தவர்கள்  "தாழ்த்தப்பட்டவர்கள்' என்று அடையாளப்படுத்தப்படவில்லை. "எஸ்.சி'(SC -  Schedule Caste)  என்பதை "அட்டவணைப் பிரிவினர்' அல்லது "பட்டியலினம்' என்று தமிழ்ப்படுத்தலாமே தவிர,  "தாழ்த்தப்பட்ட ஜாதி' என்று மொழிபெயர்த்துச் சுட்டுவதில் என்ன மொழி அறிவும், நேர்மையும் இருக்க முடியும்?

"ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களே இந்த வார்த்தையைப் பயன்படுத்துகின்றனரே' என்று வினா எழுப்புபவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழக அட்டவணை ஜாதிப் பட்டியலில் மொத்தம்  76 ஜாதிகளும், அகில இந்திய அளவில் 1,289  ஜாதிகளும் உள்ளன. இத்தனை ஜாதிகளையும் முழுவதுமாக பிரதிநிதித்துவப்படுத்துகிற ஏகபோக தலைமையும், அமைப்பும் இந்தத் தேசத்தில் இருக்கிறதா என்ன?
மனித உரிமைகளை மீட்பதாகவும், ஜாதிகளை ஒழிக்கும் போராளிகளாகவும்  சுயப் பிரகடனம் செய்துகொள்ளும் பலர், "தலித்' என்கிற பெயரை விரும்பாத இந்திரமதிகள்,  சமூகங்கள் மீதும் அதைத் திணிப்பது எந்த வகையில் மனித உரிமையைக் காப்பதாகும்?

ஒரு ஜாதியின் விருப்பத்தையும் மீறி அவர்களை "தலித்' என்கிற சொல்லால் அழைப்பேன் என்பது  இந்தத் தேசத்தில்  தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டதாக வலியுறுத்துகிற அரசியலமைப்புச்  சட்டம் (Art)17 மற்றும் இதன் ஷரத்துகளுக்கு செயல்வடிவம் கொடுக்கிற சட்டங்களான குடியுரிமைகள் பாதுகாப்புச் சட்டம் (Protection of Civil Rights Act 1955),  பட்டியலின பழங்குடியினருக்கான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் (Prevention of Atrocities Act1959)ஆகியவற்றை  மீறுகிற செயலாகும்.

தான் "தலித்' என்கிற சொல்லால் இழிவுபடுத்தப்படுவதாய் கருதுகிற எந்தவொரு பட்டியலினத்தவரும், தன் மீது இந்தச் சொல்லைப் பயன்படுத்துபவர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் (PCR Act) கீழ் வழக்குத் தொடுக்க முகாந்திரம் உள்ளது.

இந்தத் தேசத்தில் இருக்கிற 1,300 வரையிலான பட்டியலினத்தவர் அனைவரின் ஒப்புதலோடும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படவில்லை என்பதற்கு சாட்சியே இந்திரமதிகளும்,  இந்திரமதிகளின் ரத்தச் சொந்தங்கள் அண்மையில் நிகழ்த்திய நான்குநேரி சட்டப்பேரவை இடைதேர்தல் புறக்கணிப்பு பரபரப்புகளும்.

"தலித்' என்ற பெயர் எங்களுக்குத் தேவையில்லை. பட்டியலினத்தில் இருப்பதால் எங்களுக்குக் கிடைப்பதாகச் சொல்லப்படும் இட ஒதுக்கீட்டுச் சலுகையும் எங்களுக்குத் தேவையில்லை' என்று நான்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அரங்கேற்றப்பட்ட இந்தத் "தன்மான மீட்புப் பிரகடனம்' இந்தத் தேசத்தின்  ஜாதிய வரலாற்றில் என்றும், எங்குமில்லாத முன்மாதிரி.
தமிழக அளவில்   பிற்படுத்தப்பட்டோர் ஜாதிப் பட்டியலில் மொத்தம் 248 ஜாதிகளும், அகில இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 2,479 ஜாதிகளும் இருக்கின்றன. இங்கு இடஒதுக்கீடு காரணங்களுக்காக ஒரே வகைமையாக(Category: BC) அழைக்கப்படும் நேரம்போக, வேறு தனிப்பெயரில் பிற்படுத்தப்பட்டவர்கள் அழைக்கப்படவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கான அமைச்சரவையும், நலத் துறையும் "ஆதிதிராவிடர்' நலத் துறை என்று இன்றும் அழைக்கப்படுவதன் பின்னணியில் உள்ள அரசியல்  போன்றதே, இந்திய அளவில் "தலித்' என்கிற பெயரில் நடந்தேறும் அரசியலும். "தலித்' அரசியல் பேசுபவர்களில் பலர் ஜாதித் தோலும், "தலித்' முகமூடியும் அணிந்தவர்கள். இவர்களது நோக்கம் அடையாள மறுப்பு அல்ல; அடையாள மறைப்பு. "தலித்' சொல்லாடலை தூக்கிப் பிடிப்பதால் கிடைக்கும் அனுகூலங்கள், புரட்சியாளர் ஒளிவட்டத்தையும் இழக்க விரும்பாதவர்கள். ஒளிவட்டம் கரைந்து, அனுகூலங்கள் தடைபட்டதும் ஜாதித் தோலுடன் வெளிவரக் காத்திருக்கும் மிகச் சாதாரண ஜாதியவாதிகள்.
புது தில்லியைச் சேர்ந்த "டினா டாபி'  என்ற மாணவி 2015 - ஆம் ஆண்டும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த "கனிஷக்' கட்டாரியா என்ற மாணவர் கடந்த ஆண்டும் (2019), மத்திய தேர்வாணையத்தின் அகில இந்திய குடிமையியல் பணிக்கான தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றனர்.  இவர்கள் பட்டியலினத்தவர்கள். தன்னார்வத் தொண்டர்களின் எழுச்சி வார்த்தையில் சொல்வதென்றால் இவர்கள் "தலித்'துகள். இந்தச் செய்தியை எந்த  "தலித்'தியவாதியும் பேசவில்லை; கொண்டாடவில்லை என்பதில் இருக்கிறது "தலித்'தியத்தின் கமுக்க அரசியல்.

"தலித்' என்ற பெயரில் எங்காவது, யாருக்காவது ஜாதிச் சான்றிதழ் உள்ளதா?  "தலித்' நசுக்கப்பட்டவன் என்றால், இந்தத் தேசத்தின் குடிமக்களை  நசுக்குபவன் அண்டை நாட்டுக்காரரா? நொறுக்கப்பட்டவன், நொறுக்குபவன் இருவருமே  இந்தியர்கள்தானா? அண்டை  நாடுகளின் அத்துமீறலிலிருந்து தன் நாட்டு மக்களைப் பாதுகாத்துக் கொள்ள ராணுவத்தைக் கட்டமைத்து வைத்திருக்கின்ற பாரத தேசம், அதன் கால் பங்கு குடிமக்களை ஒடுக்குபவர்களிடமிருந்து காப்பாற்ற முடியவில்லையா?
தன் குடிமக்களை அரசும், அரசின் பிரதிநிதிகளும் இப்படியொரு சொல்லைக்கொண்டு அடையாளப்படுத்துவது இந்தத் தேசத்தின் இறையாண்மையைக் கேலிக்கூத்தாக்கவில்லையா? இந்திய இறையாண்மைக்கு எதிரான இந்தச் சொல்லுக்கு உடனடியாகத் தடை விதித்து, "தலித்' என்கிற பெயரில் நாட்டமுடைய தலித்தியவாதிகள், "தலித்' என்கிற பெயரிலேயே புதிதாக ஜாதிச் சான்றிதழ் பெற்றுக்கொள்ள அனுமதியும் கொடுக்கவேண்டும்.

நான் இந்தியராக, மதத்தால் ஹிந்துவாக, மொழியால்.. இனத்தால் தமிழராக, பிறப்பால் ஜாதியால் இந்திய அரசு ஆவணத்தின்படி பட்டியலினத்தின் உள்ள ஏதோ ஒரு ஜாதியாக, ஏன்... அடிப்படையில் வெறும் மனிதராகக்கூட இருந்துவிட்டுப் போகிறேன். நான் "தலித்'தாக இருக்க விரும்பவில்லை என்று நெஞ்சை  நிமிர்த்திச் சொல்லும் இந்திரமதிகளுக்கு மத்திய அரசும், ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள நாமும் எப்படி, என்ன பதில் சொல்லப் போகிறோம்?


கட்டுரையாளர்:
பத்திரிகையாளர்

No comments:

Popular Posts