Friday 17 January 2020

ராணுவ வீரர்களை போற்றுவோம்...!

ராணுவ வீரர்களை போற்றுவோம்...!  கே.எம். கரியப்பா | லெப்டினன்ட் கர்னல் தியாகராஜன், ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி. | இ ன்று(ஜனவரி 15-ந்தேதி) இந்திய ராணுவ தினம்! உலகின் நான்காவது மிகப்பெரிய ராணுவ சக்தியாகத் திகழும் இந்திய ராணுவம் 14லட்சம் தரைப்படை, கடற்படை, விமானப்படை என நாட்டின் முப்படை விரர்களை கொண்டு நாட்டை பாதுகாத்து வருகிறது. குடியரசுத் தலைவரே தலைமைக் கமாண்டராக செயல்படுகிறார்.

இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் இந்திய ராணுவ தளபதியாக ஆங்கில அதிகாரிகள் இருந்தனர். சுதந்திர இந்தியாவில் இந்தியத் தரைப்படையின் முதல் படைத்தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் கே.எம். கரியப்பா 1949-ம் ஆண்டு ஜனவரி 15-ந் தேதி ஆங்கில அதிகாரி ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சரிடமிருந்து பதவியேற்றார்.

இந்திய ராணுவத்துக்கு இந்தியரே முதல் இந்திய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் கே.எம். கரியப்பா பதவியேற்ற ஜனவரி 15-ந் தேதி ஒவ்வொரு ஆண்டும் இந்தியராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் ஆண்டுதோறும் சொந்தம், பந்தம், விருப்பு, வெறுப்பு, வாழ்க்கை, அனைத்தையும் துச்சமென கருதி, நாட்டுக்காக குருதி சிந்தும் ராணுவ வீரர்கள் மற்றும் போர் தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு, வீர வணக்கம் செலுத்தும் நாளாகவும் இத்தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பையும், அமைதியையும் மட்டுமே கருதி இந்திய ராணுவம் பாகிஸ்தானுடன் 4 முறையும், சீனாவுடன் ஒருமுறையும் போரில் ஈடுபட்டுள்ளது.

எதிரிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுவதோடு, இயற்கை சீற்றம், தேசிய பேரிடர், உள்நாட்டு கலவரம் உள்ளிட்ட நிகழ்வுகளின் போது மீட்பு மற்றும் அமைதி பணிகளிலும் ராணுவம் ஈடுபடுகிறது.

டெல்லியில் நடக்கும் இந்த விழாவில் பிரதமர், முப்படை அதிகாரிகள், கலந்து கொண்டு உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அமர் ஜவான் ஜோதியில் அஞ்சலி செலுத்துவது வழக்கம். ராணுவ பொருட்களின் கண்காட்சியும் நடக்கும்.

தேசிய ராணுவ தினத்தையொட்டி சென்னையில் போர் நினைவு சின்னத்தில் தென் பிராந்திய ராணுவத்தை சேர்ந்த முப்படை ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் முன்னாள் உயர் அதிகாரிகள் அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டு மரியாதை செலுத்துவார்கள்.

‘வடக்கில் இமயமலை பாப்பா, தெற்கில் வாழும் குமரிமுனை பாப்பா, கிடக்கும் பெரியகடல் கண்டாய் இதன் கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா, வேத முடையதிந்த நாடு, நல்ல வீரர் பிறந்ததிந்த நாடு, சேதமில்லாத ஹிந்துஸ்தானம் இதைத் தெய்வமென்று கும்பிடடி பாப்பா’, என்று பாடிய பாரதியாரின் வரிகளை மனதில் கொண்டு தியாகச் சுடராக ஒளிவீசி, ஒரு மாவீரனாக தன் தோள்களில் தன் தேசத்தை சுமந்து நம்மையும் காக்கும் ராணுவ விரர்களை போற்றுவோம்.

No comments:

Popular Posts