Wednesday, 1 January 2020

திரைஉலகில் ஓர் லட்சிய இமயம்

திரைஉலகில் ஓர் லட்சிய இமயம் | கவிஞர் ரவிபாரதி, திரைப்பட பாடலாசிரியர் |இன்று (ஜனவரி 1-ந் தேதி) நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் பிறந்தநாள் | சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர் ஆண்ட பெருமைக்குரிய நாடு நம் தமிழ்நாடு. தமிழ் திரை உலகிலும், சேர நாட்டை சேர்ந்த எம்.ஜி.ஆர். மக்கள் திலகமாகவும், சோழ நாட்டை சேர்ந்த சிவாஜி கணேசன் நடிகர் திலகமாகவும், பாண்டிய நாட்டை சேர்ந்த எஸ்.எஸ்.ஆர். லட்சியத் திலகமாகவும், ‘மூவேந்தர்களைப் போல முத்திரைப் பதித்தார்கள் என்பர்’.

அதிலும் லட்சிய திலகம், எஸ்.எஸ்.ஆரின் உணர்ச்சிப்பிரவாகமான நடிப்பும் வசனங்களில் தெளிவான தமிழ் உச்சரிப்பும் மணிஓசை போன்ற குரல்வளமும்... திரை உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது... எஸ்.எஸ்.ஆரின் தந்தை சூரிய நாராயணத்தேவரும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் இணைபிரியாத நண்பர்கள். ஒருமுறை சேடப்பட்டிக்கு வந்திருந்த தேவரிடம் ‘முத்து’ என் பிள்ளைக்கு நீயே பெயர் வைத்துவிடு என்று எஸ்.எஸ்.ஆரின் தந்தை சொன்னவுடன், சோழநாட்டு ராஜேந்திரனைப் போல, இவன் பாண்டிய நாட்டு ராஜேந்திரனாய் புகழ் பெறுவான் என்று சொல்லி, ராஜேந்திரன் என்று பெயர் சூட்டினார் தேவர். தேவரின் வாக்குப்படியே தமிழகமே போற்றக்கூடிய திரை உலகநட்சத்திரமாக ஒளிர்ந்தார் எஸ்.எஸ்.ஆர்.

தொடக்கத்தில் டி.கே.எஸ். நாடகக் குழுவில் சேர்ந்து பயிற்சி பெற்று, திரை உலகில் கால் பதித்தவர் எஸ்.எஸ்.ஆர். சந்திரோதயம் நாடகத்தில் நடிப்பதற்காக திருச்சிக்கு வந்திருந்த அறிஞர் அண்ணாவை எப்படியாவது சந்தித்துவிடவேண்டும் என்ற ஆவலில், ஒப்பனை அறைக்குச் சென்று சுற்றும் முற்றும் அண்ணாவைத் தேடியபோது... யாரைத் தேடுகிறாய் தம்பி என்று ஒரு குரல் கேட்டதாம்... அறிஞர் அண்ணாவைத் தேடுகிறேன் என்று எஸ்.எஸ்.ஆர். சொல்ல... நீ தேடுகிற அந்த அண்ணா நான்தான் என்று அண்ணா சொல்ல அதிர்ச்சியில் உறைந்து விட்டாராம் எஸ்.எஸ்.ஆர். அன்று அண்ணாவுடன் ஏற்பட்ட அந்த சந்திப்பு... எஸ்.எஸ்.ஆர். வாழ்வில் மாற்றங்களையும் ஏற்றங்களையும் கொண்டுவந்து சேர்த்தது... அண்ணாவின் பாசத்திற்குரிய தம்பியாகிவிட்டார் எஸ்.எஸ்.ஆர்.

திரைஉலகில் அண்ணாவோடு சேர்ந்து எஸ்.எஸ்.ஆரும் வளர்ந்தார். தி.மு.க. முன்னணித் தலைவர்களில் ஒருவராய் உயர்ந்தார். குடும்பத்திலும் ஒருவராய் பின்னிப்பிணைந்தார்... 1953-ல் வெளிவந்த பராசக்தி திரைப்படத்தில் சிவாஜிக்கு அடுத்து பேசப்படும் அளவுக்கு எஸ்.எஸ்.ஆரின் நடிப்பு இருந்தது. சிவாஜிக்கும், எஸ்.எஸ்.ஆருக்கும் பராசக்திதான் முதல் படம். இருவரும் முதல் படத்திலேயே முத்திரை பதித்தனர். கலைஞரின் கருத்தான வசனங்கள் இருவரையும் கைகொடுத்து தூக்கி நிறுத்தியது. தொடர்ந்து கலைஞரோடும் நெருக்கமான நட்பும் மலர்ந்தது.

முக்தா சீனிவாசன் இயக்கிய முதலாளி, ஏ.கே.வேலன் இயக்கிய தை பிறந்தால் வழிபிறக்கும், கவியரசர் கண்ணதாசன் தயாரித்த சிவகங்கைச்சீமை, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய சாரதா, கே.சங்கர் இயக்கிய ஆலயமணி, ஏவிஎம் தயாரித்த நானும் ஒரு பெண், கலைஞர் கருணாநிதியின் பூம்புகார் என்று எஸ்.எஸ்.ஆரை உயர்த்திப்பிடித்த படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்...

எத்தனை லட்சங்கள் கொடுத்தாலும் புராணப்படங்களில் ஒருபோதும் நடிப்பதில்லை என்ற கொள்கையில் இறுதிவரை உறுதியாயிருந்து லட்சிய நடிகர் என்று பேர் எடுத்தார். அன்று ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசை எதிர்த்து கம்யூனிஸ்டு தோழர்கள் கிளர்ச்சி செய்த நேரம் அது. அப்போது சிலபேர் கைதாயினர். சிலபேர் தலைமறைவாக இருந்தனர். எளிமையின் இலக்கணமாகத் திகழ்ந்த ஜீவாவும் தலைமறைவாக இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது, ஜீவாவை அரசு ஏன் கைது செய்யவில்லை என்று அண்ணா ஒரு கட்டுரையை எழுதினார். அதைப்படித்த எஸ்.எஸ்.ஆர். மிகுந்த கோபத்துடன் அண்ணாவிடம் சென்று, நீங்களே இப்படி செய்யலாமா அண்ணா என்று பலபேர் முன்னிலையில் கேட்டுவிட்டார். அண்ணா எஸ்.எஸ்.ஆரை சமாதானப்படுத்தி ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று அறையைத் திறந்து காட்டினார். அந்த அறையிலே ஜீவா பத்திரமாக இருந்தார். ‘நான் ஜீவாவுக்கு எதிர்ப்பாக எழுதினால்தான் இங்குவந்து தேடமாட்டார்கள், அதனால்தான் அப்படி எழுதினேன்,’ என்றார் அண்ணா. வெலவெலத்து போனார் எஸ்.எஸ்.ஆர்... தம்பி இனிமேல் ஜீவாவை பத்திரமாக காக்க வேண்டியது உன் பொறுப்பு என்று நம்பிக்கையோடு அனுப்பி வைத்தார் அண்ணா. அதன்படியே ஜீவாவை பத்திரமாகப் பார்த்துக் கொண்டார் எஸ்.எஸ்.ஆர்.

எது செய்தாலும் அண்ணாவிடம் சொல்லிவிட்டுச் செய்வது எஸ்.எஸ்.ஆரின் பழக்கம். தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் புதிதாகத் தான் கட்டியிருக்கும் அண்ணா இல்லத்தை, அண்ணாவே திறந்துவைக்க வேண்டுமென விரும்பி, அழைப்பிதழின் மாதிரியை அண்ணாவிடம் காட்டியபோது, அதில் இடம் பெற்றிருந்த கிரகப்பிரவேசம் என்ற சொல்லை நீக்கி “புதுமனை புகுவிழா” என்று அண்ணா மாற்றிக் கொடுத்தது சுவையான நிகழ்வாகும்.

தென் இந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த எஸ்.எஸ்.ஆர். ஆற்றிய பணி மகத்தானது. நடிகர்களுக்கிடையே ஒற்றுமை ஓங்கச் செய்து ஒழுங்குபடுத்தினார்.

ஏழிசை மன்னர் என்று போற்றப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர் மீது அளப்பரிய அன்பும் மதிப்பும் கொண்டிருந்தார். இந்தியாவில் எந்த நடிகருக்கும் இல்லாத பேரையும், புகழையும் சம்பாதித்த பாகவதர். இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டாராக விளங்கிய பாகவதர் உடல் நலிவுற்று தஞ்சை மாரியம்மன் கோவிலில் தங்கி உள்ளார் என்பதையறிந்து துடிதுடித்துப் போனார் எஸ்.எஸ்.ஆர். பாகவதரைப் போய்ப்பார்த்து அண்ணா நீங்கள் சென்னைக்கு வந்து சிறப்பான சிகிச்சை பெறவேண்டும். குணமான பின்பு நாங்கள் எல்லோரும் சேர்ந்து உங்களுக்கு விழா எடுத்து சொர்ணாபிஷேகம் செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் சென்னை வரவேண்டும் என்று எஸ்.எஸ்.ஆர். வேண்டினார். ஆனால் நலிவுற்ற நிலையிலும் தன்மானமிக்க பாகவதர் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அன்பாக மறுக்கவே வேறுவழியின்றி சென்னை திரும்பினார் எஸ்.எஸ்.ஆர்.

அதற்கு பின்னர் சென்னை பொது மருத்துவமனையில் பாகவதர் உயிர் நீத்த செய்தியறிந்து ஓடோடி வந்து, கண்ணீர் மல்கி எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா ஆகியோர்க்கு தகவல் கொடுத்து பாகவதரின் விருப்பப்படி தாய்-தந்தையருக்கு பக்கத்திலேயே திருச்சியில் நல்லடக்கம் செய்திட அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

No comments:

Popular Posts